கஜா புயல்; ரூ.1.20 கோடி நிவாரணப் பொருட்களுடன் களத்தில் இறங்கிய கமல்ஹாசன்

 

கஜா புயல்; ரூ.1.20 கோடி நிவாரணப் பொருட்களுடன் களத்தில் இறங்கிய கமல்ஹாசன்

கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நிவாரண உதவிகளை வழங்கினார்

தஞ்சாவூர்: கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நிவாரண உதவிகளை வழங்கினார்.

கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன.

புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், திரைபிரபலங்கள், அரசியல் கட்சிகள் என ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பால், அரிசி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள், போர்வை போன்ற அத்தியாவசிய உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் டெல்டா மாவட்டங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் ஆற்றி வரும் களப்பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் மக்களுக்கு பணமாக இல்லாமல் பொருளாகவும் செயலாகவும்  பயன்படும் என்றார். மேலும், தற்போது ரூ.1.20 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் தம்முடன் வந்திருப்பதாகவும், ஏற்கனவே ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கஜா புயலால், எதிர்பார்த்ததை விட அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கமல்ஹாசன், இதனை தேசிய அளவில் பேரிடராக அணுக வேண்டும் என வலியுறுத்தினார். முதல்வர் முதலில் இங்கு வந்து பார்த்து விட்டு பின்னர், மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரினால் சரியாக இருக்கும் எனவும் கமல் தெரிவித்தார்.