கஜா புயல்: மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

 

கஜா புயல்: மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

கஜா புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது

சென்னை: கஜா புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயலுக்கு கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே வருகிற 15-ம் தேதி கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது காற்று அதிகளவில் வீசும். கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கஜா புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்வருமாறு: 

**பேட்டரிகள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள், குடிநீர் கேன்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளவும். 

**உலர்ந்த பழங்கள் போன்ற சமைக்காமல் அப்படியே சாப்பிடும் பொருட்களை வாங்கி வீட்டில் பத்திரப்படுத்துங்கள். 

**புயல் மற்றும் மழை நிலவரம் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள வழிவகை செய்து கொள்ளுங்கள். 

**மழை, புயல் பற்றி யார் எந்த தகவல் அனுப்பினாலும் அதனை உடனே ஃபார்வேர்ட் செய்யாதீர்கள். 

**தவறான தகவல்களை நீங்களாக யாருக்கும் சொல்ல வேண்டாம். எச்சரிக்கிறோம் என்று கூறி அச்சுறுத்த வேண்டாம். 

**புயல் கரையைக் கடக்கும் நேரம், மழைப்பொழிவு, காற்றின் வேகம் ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் வாயிலாக உறுதி செய்து கொள்ளுங்கள். 

**வீடு அல்லது நீங்கள் இருக்கும் பகுதிக்குள் தண்ணீர் வரும் என்றால் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள். வீடு பாதுகாப்பான இடமாக இருந்து வெள்ளம் சூழ்ந்தால், வீட்டில் உயரமான பகுதியில் இருங்கள். 

**கீழ்தளத்தில் இருக்கும் போது வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருந்தால் முக்கியமான பொருட்களை உயரமான இடத்துக்கு இடம்மாற்றுங்கள்.

**அடித்துச் செல்லக் கூடிய, பறக்கும் பொருட்களை கட்டி வையுங்கள். கண்ணாடி கதவு ஜன்னல்களை மூடி வையுங்கள். மின்சாரச் சாதனங்களை மின் இணைப்பில் இருந்து துண்டியுங்கள். 

**மருந்து மாத்திரை, உணவு போன்ற மிக மிக அத்தியாவசியமான பொருட்களை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

**உங்கள் சொத்து, வீடு உள்ளிட்ட பொருட்களை நினைத்து கவலை கொள்ளாதீர்கள். நீங்கள் பத்திரமாக இருப்பதை பற்றி உறுதி செய்யுங்கள்.

**எந்த நேரத்திலும் அச்சமோ, பயமோ கொள்ளத் தேவையில்லை. எந்த நேரத்தையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருங்கள். 

இவ்வாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.