கஜா புயல் பாதிப்பு: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றும், நாளையும் நேரில் ஆய்வு

 

கஜா புயல் பாதிப்பு: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றும், நாளையும் நேரில் ஆய்வு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றும், நாளையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்

நாகப்பட்டினம்: கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றும், நாளையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

கஜா புயலால் சூறையாடப்பட்ட காவிரி பாசன மாவட்டங்கள் சின்னாப்பின்னமாகியுள்ளன. தஞ்சாவூர், நாகப்பட்டினர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், அவற்றையொட்டிய புதுக்கோட்டை மாவட்டத்திலும் மிகக்கடுமையான பாதிப்புகளும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

புயல் பாதிப்பால் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி டெல்டா மாவட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர். உணவுக்கு வழியில்லாமல் பனங்குருத்து கஞ்சி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதுதவிர, திரைப்பிரபலங்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். 

அதேபோல், மீட்பு பணிகளை முடிக்கி விட்டுள்ள தமிழக அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதுதவிர புயல் பாதிப்புக்கு உள்ளான விவசாய நிலங்களுக்கு இழப்பீடுகளையும் அரசு அறிவித்துள்ளது. எனினும், அரசு தரப்பில் முறையான நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். ஆனால், பல்வேறு பகுதிகளை அவர் பார்வையிடாமல் திரும்பியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், புயல் பாதித்த மூன்று மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றும் நாளையும் நேரில் ஆய்வு மேற்கொள்வுள்ளார். இன்று நாகையிலும், நாளை திருவாரூர், தஞ்சாவூரிலும் ஆளுநர் நேரில் ஆய்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.