கஜா புயல் பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

 

கஜா புயல் பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்

நாகப்பட்டினம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.

கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சூறையாடியுள்ளது. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி மீட்பு பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கோரியுள்ளார்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வராதது விமர்சனத்துக்குள்ளாகி உள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.