கஜா புயல் நிவாரணம் எப்போது அறிவிக்கப்படும்? மத்திய அரசு தகவல்

 

கஜா புயல் நிவாரணம் எப்போது அறிவிக்கப்படும்? மத்திய அரசு தகவல்

கஜா புயல் நிவாரணம் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

மதுரை: கஜா புயல் நிவாரணம் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளுக்காக  தமிழக அரசு சார்பில் ரூ 15,000 கோடி மத்திய அரசிடம் கேட்டு முதற்கட்டமாக ரூ 1,500 கோடி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ 353.70 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசு தெரிவித்தது.  இதற்கிடையே தமிழகம் வந்த மத்திய குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது. இதனையடுத்து மத்திய குழு தாக்கல் செய்யும் அறிக்கையை பொறுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஸ்டாலின் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசிடம் நிதி இருந்தும் கஜா புயல் நிவாரண நிதியை தரவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டியது.  இதையடுத்து இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், கஜா புயல் நிவாரணம் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என கூறினார். மேலும், தமிழகத்திடம் ஏற்கனவே மாநில பேரிடர் நிதியில் ரூ 1000 கோடி இருப்பு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.