கஜா புயல்; நாகையில் நிவாரண உதவி வழங்கினார் முதல்வர்

 

கஜா புயல்; நாகையில் நிவாரண உதவி வழங்கினார் முதல்வர்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகப்பட்டினத்தில் முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி வழங்கினார்.

நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகப்பட்டினத்தில் முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி வழங்கினார்.

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை தனது கோர கரங்களால் அலசி போட்டிருக்கிறது. இதனால் அங்கு அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மகக்ள் திணறி வருகின்றனர். இதனையடுத்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 20-ம் தேதி ஹெலிகாப்டரில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஆய்வு செய்தனர். 

ஆனால் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கிய முதல்வர் பழனிசாமி மோசமான வானிலை என கூறி நாகை மற்றும் திருவாரூருக்கு செல்லாமல் திரும்பிவிட்டார். இதனால் பெரும் விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில் நாகை மற்றும் திருவாரூரை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி ரயில் மூலம் நேற்று புறப்பட்டு இன்று காலை நாகைக்கு சென்றடைந்தார். இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நாகையில் இருக்கும் நிவாரண முகாமுக்கு சென்ற முதல்வர், புயலால் உயிரிழந்தவர்களின் 3 குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் காசோலையையும் நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

அதேபோல் குடிசையை இழந்த 386 குடும்பத்தினருக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்ப்பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். அவருடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ் மணியன் உள்ளிட்டோர் இருந்தனர். இன்று பிற்பகல் 2 மணி வரை நாகையில் ஆய்வு செய்யும் முதல்வர் அதன் பிறகு திருவாரூர் சென்று ஆய்வு நடத்த இருக்கிறார்.