கஜா புயல்: டிவிஎஸ் மோட்டார்ஸ் ரூ.2 கோடி நிதி; சக்தி மசாலா ரூ.1 கோடி நிதி

 

கஜா புயல்: டிவிஎஸ் மோட்டார்ஸ் ரூ.2 கோடி நிதி; சக்தி மசாலா ரூ.1 கோடி நிதி

கஜா புயல் நிவாரண நிதியாக டிவிஎஸ் குழுமம் ரூ.2 கோடி நிதியுதவியும், சக்தி மசாலா ரூ.1 கோடி நிதியுதவியும் வழங்கியுள்ளது

சென்னை: கஜா புயல் நிவாரண நிதியாக டிவிஎஸ் குழுமம் ரூ.2 கோடி நிதியுதவியும், சக்தி மசாலா ரூ.1 கோடி நிதியுதவியும் வழங்கியுள்ளது.

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, டெல்டா மக்களுக்கு கைகொடுக்கும் விதமாக, பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், திரைபிரபலங்கள், அரசியல் கட்சிகள் என ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகளையும் தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அதேபோல், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், கஜா புயல் நிவாரண நிதியாக டிவிஎஸ் குழுமம் சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அந்நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் நேரில் வழங்கினார். அதேபோல், சக்தி மசாலா நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் துரைசாமி, இயக்குனர் சாந்தி துரைசாமி ஆகியோர் கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.