கஜா புயல்: களத்தில் இறங்கிய விஜய் சேதுபதி… நிவாரண உதவிகள் அறிவிப்பு!

 

கஜா புயல்: களத்தில் இறங்கிய விஜய் சேதுபதி… நிவாரண உதவிகள் அறிவிப்பு!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்ற கஜா புயலினால், மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்

கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி டெல்டா பகுதி மக்களுக்காக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக பேசிய விஜய் சேதுபதி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகள் முழுவதுமாக புனரமைத்து தரப்படும்.

gajacyclone

அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும்.  இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார்.

gajacyclone

சென்னை வெள்ளம், கேரள வெள்ளத்தையடுத்து, தமிழ் திரையுலகினர் ஒன்றிணைந்து டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும், நிதியுதவியும் அளித்து வருகின்றனர். நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பாக ரூ.50 லட்சம், நடிகர் ஜி.வி.பிரகாஷ், விஷால் உள்ளிட்டோர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரூ25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.