கஜா புயல் எதிரொலி: தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

 

கஜா புயல் எதிரொலி: தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

கஜா புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம்: கஜா புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான கஜா புயல், சென்னைக்கு கிழக்கே 580  கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 680 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போதைய நிலவரப்படி நிலை கொண்டுள்ளது.

இந்த நிலையானது வரும் 24 மணி நேரத்தில் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறும். பின்னர் வழுக்குறைந்து நாளை  பிற்பகலில் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடலூர் – பாம்பன் இடையே கஜா  புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இன்று மாலை 5 மணி முதல் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

தனுஸ்கோடி செல்லும் சுற்றுலா வாகனங்கள் வேர்கோடு பகுதியுடன் நிறுத்தப்படும் எனவும், மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.