கஜா புயல்: உதவிப் பொருட்களை அனுப்பக் கட்டணம் இல்லை-போக்குவரத்து துறை

 

கஜா புயல்: உதவிப் பொருட்களை அனுப்பக் கட்டணம் இல்லை-போக்குவரத்து துறை

கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பக் கட்டணம் இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

சென்னை: கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பக் கட்டணம் இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளனர்.

இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகளையும் தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பால், அரிசி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள், போர்வை போன்ற அத்தியாவசிய உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு பேருந்துகள் மூலமாக உதவிப்பொருட்களை அனுப்புவதற்குக் கட்டணமில்லை எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, நிவாரணப் பொருட்களை அரசு பேருந்துகளில் அனுப்ப, எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள போக்குவரத்துத் துறை, இதுகுறித்த அறிவுறுத்தல்கள் நடத்துனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.