கஜா புயலை எதிர்கொள்ள ரெடி; மீட்புக் குழுவினர் புறப்பட்டனர்

 

கஜா புயலை எதிர்கொள்ள ரெடி; மீட்புக் குழுவினர் புறப்பட்டனர்

கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புறப்பட்டு சென்றனர்

சென்னை: கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புறப்பட்டு சென்றனர்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயலுக்கு கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே வருகிற 15-ம் தேதி கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது காற்று அதிகளவில் வீசும். கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, கஜா புயலை எதிர்கொள்ள மாநில அரசு முழுவீச்சில் ஆயத்தமாக உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். பெரும் பாதிப்பு இருப்பதாக கருதப்படும் பகுதிகளுக்கு நிவாரணப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். புயல் அதிவேகத்தில் கரையை கடக்கும் எனபதால் தேசிய மீட்பு குழுவினரின் உதவியை நாட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாகை, கடலூர், சென்னை, சிதம்பரம், ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புறப்பட்டு சென்றனர். அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ள 8 குழுக்கள், சாலை வழியாக அனைத்து கருவிகளுடனும் செல்கிறது. மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.