கஜா புயலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் பேட்டியின் முழு விபரம்…

 

கஜா புயலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் பேட்டியின் முழு விபரம்…

தமிழகம் முழுவதும் கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்: தமிழகம் முழுவதும் கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயலானது, நேற்றிரவு நாகப்பட்டினம் வழியாக புதுக்கோட்டை, கடலூர், வேதாரண்யம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை சூறையாடிவிட்டு கேரளா நோக்கி நகர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த புயலில் சிக்கி தற்போது வரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே அரசு திட்டமிட்டு பணியாற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றங்கள் என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என யாராலும் கணிக்க முடியாது. இருப்பினும், அரசின் சீறிய முயற்சியால் மக்கள் பத்திரமாக இருக்கின்றனர். புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோயை  தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைந்து பணியாற்றி மின்விநியோகம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி யாக வழங்கப்படும்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.