கஜா புயலால் 45 பேர் உயிரிழந்ததை அறிந்து வருத்தம் அடைந்தேன்: முதல்வர் அறிக்கை!

 

கஜா புயலால் 45 பேர் உயிரிழந்ததை அறிந்து வருத்தம் அடைந்தேன்: முதல்வர் அறிக்கை!

கஜா புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாகவும் அனைத்து நிவாரண பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சென்னை: கஜா புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாகவும் அனைத்து நிவாரண பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சில இடங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்லை என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கஜா புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25, 000 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

மேலும், இந்தப் புயலின் போது 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

கஜா புயல் காரணமாக 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 30, 404 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதடைந்துள்ளன. மேலும், 30,328 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும். கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும். 

புயலால் சேதமடைந்த பகுதிகளைச் சீர்செய்ய மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தக் கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள்’  என்று தெரிவித்துள்ளார்.