கஜா கோரத்தாண்டவம்…. பெற்ற மகனையே விற்ற தந்தை

 

கஜா கோரத்தாண்டவம்…. பெற்ற மகனையே விற்ற தந்தை

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் தனது மகனை ரூ 10,000-க்கு பெற்ற தந்தையே விற்ற சோக சம்பவம் பட்டுக்கோட்டையில் நடந்துள்ளது.

தஞ்சாவூர்: கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் தனது மகனை ரூ 10,000-க்கு பெற்ற தந்தையே விற்ற சோக சம்பவம் பட்டுக்கோட்டையில் நடந்துள்ளது.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் தனது அசுர கரங்களால் அலசி போட்டிருக்கிறது. இதனால் அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என தெரியாமல் இருந்து வருகின்றனர். அரசு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் அது சரிவர வந்து சேரவில்லை என்ற குற்றச்சாட்டையும் பாதிக்கப்பட்ட மக்கள் முன் வைத்து வருகின்றனர். மேலும், நிவாரண உதவிகள் செய்ய வருபவர்களின் வாகனங்களின் பின்னால் உணவு கேட்டு பொதுமக்கள் ஓடிய வீடியோ வெளியாகி காண்போரை கலங்க செய்தது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஒரு சோக சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி மாரிமுத்து. அவரது மனைவி வசந்தா. கஜா புயலால் இந்த தம்பதியினரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் வேறு வழியின்றி தங்களது நான்காவது மகனை ரூ.10,000-க்கு நாகப்பட்டினத்தை அடுத்த பனங்குடி என்ற இடத்தில் ஆடு மேய்க்க கொத்தடிமையாக விற்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவன் நாகை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் தஞ்சையில் இருக்கும் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுவனை கொத்தடிமையாக வாங்கிய நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் பெற்ற தந்தையே தனது மகனை கொத்தடிமையாக விற்ற சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.