கஜா, கேரளா பாதிப்புக்கு தெய்வ குற்றம் தான் காரணம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் பகீர் தகவல்!

 

கஜா, கேரளா பாதிப்புக்கு  தெய்வ குற்றம் தான் காரணம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் பகீர் தகவல்!

கஜா புயல், கேரள வெள்ள பாதிப்பு என அனைத்துக்கும் சபரிமலை விவகாரத்தில் கலாச்சாரத்தை மீறியதால் வந்த தெய்வ குற்றமே காரணம் என்று சடகோப ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார்.

 ஸ்ரீவில்லிபுத்தூர்: கஜா புயல், கேரள வெள்ள பாதிப்பு என அனைத்துக்கும் சபரிமலை விவகாரத்தில் கலாச்சாரத்தை மீறியதால் வந்த தெய்வ குற்றமே காரணம் என்று சடகோப ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்து அமைப்புகள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தி, கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீவில்லிப்புத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர், ‘உச்சநீதிமன்றம் இப்படி விசித்திரமாக தீர்ப்பு சொல்லும் என்று எதிர்பார்க்கவில்லை.ஐயப்பன் கோவிலுக்குள் இளம் பெண்கள் போகலாம்  என உச்சநீதிமன்றம்  சொல்லியிருப்பதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது.அதே நேரத்தில் கேரள அரசு சபரிமலை விவகாரத்தில் அவசரம் காட்டுவதாகவும், முல்லை பெரியாறு போன்ற பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சபரிமலை வழக்கில் மட்டும் அவசரம் ஏன்?’  என்றும் கேள்வி எழுப்பினார்.

‘சபரிமலைக்குப் பெண்கள் அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும் . ஆகம விதிகளைப் பின்பற்ற வேண்டும். சபரிமலை பிரச்சினையில் மத்திய அரசும், கேரள அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயல், கேரள வெள்ள பாதிப்பு என அனைத்துக்கும் கலாச்சாரத்தை மீறியதால் வந்தது தெய்வ குற்றமே காரணம். இந்து கலாச்சாரத்தின் அடிப்படையில் தந்திரி என்ன சொல்கிறாரோ அதன்படி பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பிரச்னைகள் வராது’ என்று குறிப்பிட்டுள்ளார்.