கச்சா எண்ணெய் விலை குறைந்தும், குறையாமல் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை.. என்னதான் காரணம்?

 

கச்சா எண்ணெய் விலை குறைந்தும், குறையாமல் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை.. என்னதான் காரணம்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருப்பதற்கு ரூபாயின் வெளிமதிப்பு மற்றும் வரிகளும்தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது உலகில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் என இரண்டு விதமான கச்சா எண்ணெய் விற்பனையாகிறது.  ப்ரெண்ட் கச்சா எண்ணெய் உலகளாவிய அளவு கோலாகும். அதேசமயம் டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் அமெரிக்காவிற்கு மட்டுமே குறிப்பிட்டது. இந்தியா உள்பட பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு பயன்படுத்தும் சர்வதேச அடிப்படை விலையாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை உள்ளது

கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என நாம் அனைவரும் எதிர்பார்ப்பது இயற்கையான ஒன்று. இந்நிலையில் நேற்றுமுன்தினம் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை (பேரலுக்கு) இதுவரை இல்லாத அளவுக்கு பூஜ்ய டாலருக்கும் கீழ் சென்றது. மேலும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 28 டாலராக குறைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் கோட்பாட்டளவில் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும்.

பெட்ரொல் பங்க்

ஆனால் தற்போது நம் நாட்டில் துரதிருஷ்டவசமாக பெட்ரோல், டீசல் விலை பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கிறது. இதற்கு ரூபாய் மதிப்பும் ஒரு காரணம். கச்சா எண்ணெய் இறக்குமதி டாலரில் நடைபெறுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு மிகவும் பலகீனமாக உள்ளது. அமெரிக்க டாலருக்கும், இந்திய ரூபாய்க்கும் இடையிலான வித்தியாசம் எண்ணெய் விலை குறைவு ஆதாயத்தை இல்லாமல் செய்து விடுகிறது.

பெட்ரொல் பங்க்

மத்திய அரசு எண்ணெய் விலையை கட்டுப்படுத்துகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியங்களுக்கு எதிரான நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய இது செய்யப்படுகிறது. எனவே எண்ணெய் அடிப்படை விலைக்கு மேல் அரசாங்க வரிகள் வரும். இது நுகர்வோருக்கான சில்லரை செலவை அதிகரிக்கும். இதுதவிர இந்தியாவின் எரிபொருள் விலையில் பெரும்பகுதி வரிகளை உள்ளடக்கியது. உதாரணமாக கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.22.98 வரையும், ஒரு லிட்டர் டீசல் விலையில் ரூ.18.83 வரையும் உள்ளது. கடந்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியது. மேலும் வரியை லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்த நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.