ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு: பிளிப்கார்ட் இணை நிறுவனர் அதிரடி

 

ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு: பிளிப்கார்ட் இணை நிறுவனர் அதிரடி

பிளிப்கார்ட் இணை நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால், வாடகை கார் நிறுவனமான ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

புதுதில்லி: பிளிப்கார்ட் இணை நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால், வாடகை கார் நிறுவனமான ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் காலூன்ற துடிக்கும் வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. இதையடுத்து, பிளிப்கார்ட் இணை நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தமது பங்குகளை விற்று விட்டு ராஜினாமா செய்தார். தற்போது, 81.3 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் தன் வசம் வைத்துள்ளது.

இந்நிலையில், வாடகை கார் நிறுவனமான ஓலா நிறுவனத்தில் சச்சின் பன்சால் ரூ.650 கோடி முதலீடு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை கார் சேவை துறையில் உபெர் – ஓலா நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் கூடுதலாக 100 கோடி டாலர் முதலீட்டை ஈர்க்கும் இலக்கின் ஒரு பகுதியாக இந்த முதலீட்டை ஓலா பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, நன்னடத்தை குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணைநிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பின்னி பன்சாலும் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.