ஓபிஎஸ் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 

ஓபிஎஸ் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை தள்ளி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை தள்ளி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதற்கிடையே அவர்கள் தற்போது ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக மற்றும் டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யபட்டது.

இதனையடுத்து இந்த மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. ஆனால் இந்த வழக்கு குறித்த விசாரணையை ஒத்தி வைக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஓபிஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் நாளை திட்டமிட்டப்படி விசாரணை நடக்கும் என தெரிவித்துள்ளது.