ஓபிஎஸ் தம்பிக்கு எதற்காக ராணுவ விமானம் கொடுத்தோம்: நிர்மலா சீதாராமனின் பலே விளக்கம்

 

ஓபிஎஸ் தம்பிக்கு எதற்காக ராணுவ விமானம் கொடுத்தோம்: நிர்மலா சீதாராமனின் பலே விளக்கம்

துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பிக்கு எதற்காக ராணுவ விமானம் கொடுக்கபட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பிக்கு எதற்காக ராணுவ விமானம் கொடுக்கபட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து அவரை மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக ராணுவ விமானம் அனுப்பப்பட்டு அதில் பாலமுருகன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. மேலும் ஒரு நாட்டின் ராணுவ விமானத்தை அதிகாரத்தில் இருப்பதால் அவரது சகோதரருக்கு எப்படி பயன்படுத்தலாம். இதனை செய்த நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பலர் கூறி வந்தனர். மேலும், இந்த செயல் மூலம் ஓபிஎஸ் பாஜகவின் செல்லப்பிள்ளை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது எனவும் பல்வேறு தரப்பினர் கூறினர்.

இந்நிலையில், ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவசர நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது. தற்போதுகூட இமாச்சலபிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளது. உதவி கேட்பவர்களுக்கு அவசர உதவி  வழங்கப்படுகிறது  என்றார்.

இருப்பினும், இமாச்சலபிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ராணுவ விமானம் அனுப்பியதற்கும், ஓபிஎஸ் தம்பிக்காக அனுப்பியதற்கும் மிகவும் வேறுபாடு இருக்கிறது. அவசர உதவிக்குத்தான் ராணுவ விமானம் அனுப்பப்பட்டது என்றால் அதிகாரத்தில் இல்லாதவர்களுக்கோ இல்லை பாஜகவுக்கு எதிர்முகாமில் இருப்பவர்களுக்கோ ஏதேனும் ஒரு அவசர நிலை ஏற்பட்டால் ராணுவ விமானத்தை நிர்மலா அனுப்பி வைப்பாரா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.