ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது

டெல்லி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தனி அணியாக செயல்பட்டு வந்த போது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முதல்வர் பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வருக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் வாக்களித்தனர். பின்னர்  டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டு இரு தரப்பினரும் ஓரணியாகி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனார்.

இதையடுத்து, முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்க செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். இதே போல் டிடிவி தினகரன் தரப்பிலும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சபாயாயகரின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பிலும், டிடிவி தினகரன் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களுக்கு எதிரான திமுக மற்றும் டிடிவி தினகரன் தரப்பு மனுக்கள்  மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற உள்ளது.

முன்னதாக, வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஓபிஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் நாளை திட்டமிட்டப்படி விசாரணை நடக்கும் என தெரிவித்தது.