ஓட்டுப் போட சொல்லும் எங்களுக்கே ஓட்டு இல்லை – புலம்பும் தேர்தல் பணியாளர்கள்

 

ஓட்டுப் போட சொல்லும் எங்களுக்கே ஓட்டு இல்லை – புலம்பும் தேர்தல் பணியாளர்கள்

தேர்தல் பணிகளுக்காக முன் பின் தெரியாத ஏதோ ஓர் ஊரின் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படும் அரசு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

இந்தியாவின் 17 – ஆவது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 -ஆம் தேதி 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், சட்டமன்றத்தில் காலியாக உள்ள 18 தொகுதி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. இதையடுத்து நாடெங்கும் தேர்தல் ஜுரம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. 

ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு வகையில் பரபரப்பாக இருக்கின்றனர். தேர்தல் ஆணையம் தேர்தலை சிறப்பாக சர்ச்சைகளின்றி நடத்தி முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. அரசியல்வாதிகள் ஓயாமல் ஊர் ஊராக ஓடி வாக்கு சேகரித்து வருகின்றனர். ஊடங்கங்களுக்கு தற்போது செய்திகளுக்கு பஞ்சமில்லை. இவர்களையெல்லாம் தாண்டி தேர்தல் என்றாலே சங்கடத்தில் முகம் சுழிக்கின்றனர் ஒரு தரப்பினர். 

election duty

அடிப்படை வசதிகளுக்கே திண்டாட்டம் 

வாக்குச்சாவடிகளில் தேர்தல் வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தான் தேர்தல் பணிகள் எட்டிக்காயாக கசக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஜாலியான வேலை, அதிகப்படி சம்பளம் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தோன்றினாலும் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். முக்கியமாக வாக்குச்சாவடிகளில் பணிக்கு நியமிக்கப்படும் பெண்கள் அதிகமான பாதிப்புகளுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர்.

இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது தங்குவதற்கான இடம் தான். வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்குச் செல்லும் பெண்கள் தேர்தல் நடக்கும் பள்ளிகளில் இருக்கும் வகுப்பறைகளிலேயே தான் தங்கி கொள்ள வேண்டுமாம். தங்குவது கூட பரவாயில்லை கழிவறை வசதிகள் சரி வர இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் இந்த பெண் ஊழியர்கள். தேர்தல் அன்று காலையில் அருகிலிருக்கும் வீடுகளுக்கு சென்று கேட்டுத் தான் அங்கு குளித்து தயாராகிறார்களாம்.

“இது மட்டுமன்றி, தேர்தல் முடிந்த அன்று இரவு வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகரிகள் வந்து எடுத்துச் சென்ற பின்பு தான் நாங்கள் கிளம்ப வேண்டும். சில நேரங்களில் 11 மணிக்கு மேல் கூட வருவார்கள். அதன் பின்பு அனைவரும் அவரவர்கள் பாட்டுக்கு சென்று விடுவார்கள். நடுராத்திரியில் முன்பின் தெரியாத ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து நாங்கள் எப்படி ஊருக்கு திரும்புவோம் என்று யாரும் யோசிக்க மாட்டார்கள்.” எனக் கவலை தெரிவிக்கிறார் சென்னையில் பணி புரியும் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர்.

election duty

இத்தனை பிரச்சனை இருக்கிறதே பின் ஏன் அங்கு செல்கிறார்கள்? மேலதிக வருமானத்திற்கு தானே? போகாமல் இருக்கலாமே என்று நமக்குத் தோன்றும். ஆனால் , என்ன பிரச்சனை என்றாலும் அரசு அனுப்பும் வேலைகளுக்கு சென்று தான் ஆக வேண்டும் நிர்பந்திக்கப்படுகிறார்கள் அரசு ஊழியர்கள். தேர்தல் நேரத்தில் திருமணம் நடக்கவிருக்கும் பெண் ஒருவரின் முன்னனுமதிக் கடிதத்தை நிராகரித்து அவரையும் தேர்தல் பணிக்கு நியமித்திருப்பதே இதற்குச் சான்று.

தேர்தல் பணி செய்பவர்களுக்கே ஓட்டு இல்லை 

“இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், நாங்கள் ஓட்டு போட முடியாது என்பது தான் கொடுமை. எங்களால் வேறு வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட முடியாது. தபால் வாக்கு அளிக்கவும் எங்களுக்கு அனுமதி இல்லை.” என்கிறார் காவல்துறையில் பணிபுரியும் ஒருவர். தபால் ஓட்டுக்கு விண்ணப்பம் அளித்தாலும் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையெழுத்திட்டு அனுமதிப்பதற்குள் தேர்தல் முடிந்து முடிவுகள் வந்து விடுமாம். இது பற்றி சில அரசுப் பணியாளர்கள் வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

election duty

நாட்டில் எத்தனை தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மொத்தம் எத்தனை பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்றால் குறைந்தபட்சம்  10% – 15% வரை வாக்குப்பதிவு சதவீதத்தில் குறையும் தானே? வாக்களிப்பது உங்கள் உரிமை. ஓட்டு தான் உங்கள் ஆயுதம் என்பது போன்ற பிரச்சாரங்கள் எல்லாம் இதே ஆசிரியர்களையும் அதிகாரிகளையும் வைத்துத் தானே செய்கிறார்கள்? ஊருக்குத் தான் உபதேசமா? என்று வருத்தம் தெரிவிக்கிறார் தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் பொதுப்பணித்துறையில் பணி புரியும் பெண் ஒருவர்.

அரசு பணியென்று அடிப்படை உரிமையான ஓட்டை இழக்கும் இவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது அரசு ?