ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… மத்திய அரசின் கைக்கு வரும் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள்….

 

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… மத்திய அரசின் கைக்கு வரும் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள்….

இந்த மாதம் முதல் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கும் இந்தியர்களின் நிதிநிலை விவரங்கள் மத்திய அரசுக்கு கிடைக்க தொடங்கி விடும். இதனால் கருப்பு பண முதலைகள் கிலியில் உள்ளனர்.

சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்கள், கருப்பு பணம் வைத்திருபவர்கள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் பணத்தை போடுவதை விரும்புவர். ஏனென்றால், அந்நாட்டு வங்கிகள் வாடிக்கையாளர்கள் குறித்த தகவலை மிகவும் ரகசியாக வைத்திருக்கும். இதனால் தங்களது தகவல்கள் வெளியே தெரியாது என்று கருப்பு பண முதலைகள் தைரியமாக அந்த வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர்களும் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர்.

சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு அந்நாட்டு அரசிடம் பலமுறை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியது. இதனையடுத்து கடந்த 2016 நவம்பர் மாதத்தில் இருநாடுகளுக்கும் இடையே வங்கி கணக்கு வைத்திருப்போர் பற்றிய தகவல்களை தானாக பரிமாறி கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 2019 செப்டம்பர் முதல் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் மற்றும் நிதிதகவல்களை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு அளிக்க தொடங்கும்.

2019 செப்டம்பர் இன்று பிறந்து விட்டதால் நிதி தகவல்களை தானாகவே பரிமாறும் கொள்ளும் ஒப்பந்தப்படி, இந்த மாதம் முதல் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் மற்றும் நிதிநிலை தகவல்களை சுவிட்சர்லாந்து அரசிடமிருந்து மத்திய அரசு பெற தொடங்கி விடும். 

சுவிஸ் வங்கி
சுவிட்சர்லாந்து அரசு முதலில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் 2018ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைகளை மத்திய அரசுக்கு வழங்கும். கருப்பு பண ஒழிப்பு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு நடவடிக்கைக்கு இது பெரும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும். இதனால் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் மிகவும் கிலியில் உள்ளனர்.