ஒழுங்கா பாக்கி எடுத்து கீழ வையுங்க…. இல்லைன்னா 6ம் தேதியிலிருந்து எரிபொருள் கட்… ஏர்இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்…

 

ஒழுங்கா பாக்கி எடுத்து கீழ வையுங்க…. இல்லைன்னா 6ம் தேதியிலிருந்து எரிபொருள் கட்… ஏர்இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்…

நிலுவை தொகையை தரவில்லை என்றால் 6ம் தேதி முதல் ஹைதராபாத் மற்றும் ராய்ப்பூர் விமான நிலையங்களில் உங்க விமானங்களுக்கு எரிபொருள் சப்ளையை நிறுத்தி விடுவோம் என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டல் விடுத்துள்ளன.

விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பொதுத்துறையை சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட ஏர் இந்தியா நிறுவனம் தற்போது சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவிக்கிறது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஹைதராபாத் விமான நிலையம்

இதற்கிடையே, ஏர் இந்தியா நிறுவனம் எரிபொருளுக்கான பாக்கி தொகையை தராததால், கொச்சி, மொகாலி, புனே, ராஞ்சி, பாட்னா மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கான எரிபொருள் சப்ளையை கடந்த மாதம் 22ம் தேதி எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. இந்நிலையில், பாக்கி தொகையை தரவில்லை என்றால், செப்டம்பர் 6ம் தேதி முதல் ஹைதராபாத் மற்றும் ராய்ப்பூர் விமான நிலையங்களில் உங்க விமானங்களுக்கு எரிபொருள் சப்ளையை நிறுத்தி விடுவோம என எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் ஏர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் ஏர் இந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது.

 ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா தினமும் 42 விமானங்கள் இயக்கி வருகிறது. அதில் பெரும்பாலானவை வெளிநாட்டுக்கு செல்பவை. ராய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா தினமும் 12 விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.

ராய்ப்பூர் விமான நிலையம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் சப்ளையை நிறுத்தி விட்டால் விமானங்களை இயக்க முடியாது என கூறினார்.

2019 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ஏர் இந்தியா நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை ரூ.4,600 கோடியாக இருந்தது. இது கடந்த ஜூலை 31ம் தேதி ரூ.4,300 கோடியாக குறைந்தது. ஏர் இந்தியா தற்போது தினமும் எரிபொருளுக்காக ரூ.18 கோடி செலுத்தி வருகிறது. இதுதவிர வரும் அக்டோபர் மாதம் வரை அந்நிறுவனத்தால் பணியாளர்களுக்கு சம்பளத்தை போட முடியும். அதற்கு மேல் மத்திய அரசு ஏதாவது நிதி கொடுத்தால்தான் முடியும் என்ற நிலையில் ஏர் இந்தியா உள்ளதாக தகவல்.