ஒரே மாதத்தில் 1.17 கோடி புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ – ட்ராய் தகவல்

 

ஒரே மாதத்தில் 1.17 கோடி புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ – ட்ராய் தகவல்

கடந்த ஜூலை மாதம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1.17 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

டெல்லி: கடந்த ஜூலை மாதம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1.17 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டெலிகாம் துறையில் அடியெடுத்து வைத்தது. முதற்கட்டமாக அன்லிமிடெட் 4ஜி சேவை, இலவச வாய்ஸ்கால், மெசேஜ்கள் ஆகியவற்றை அளித்து மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதனால் போட்டி நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் பிளான்களை

முழுமையாக மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. மிகக் குறுகிய காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று சாதித்தது. இந்நிலையில், ஜூலை மாதத்துக்கான தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை சமீபத்தில் ட்ராய் (TRAI) வெளியிட்டது. இதில் மாதாந்திர வளர்ச்சியாக ஜூலை மாதம் மட்டும் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 0.89% சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ஜியோவில் மட்டும் சுமார் 1.17 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதற்கு காரணம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஜியோ மான்ஸூன் ஹங்காமா சலுகை தான் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் 19.62 சதவிகிதத்தை ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் போட்டி நிறுவனங்களுக்கும் ஜியோவுக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது. ஜியோவுக்கு அடுத்த இடத்தில் உள்ள வோடஃபோன் நிறுவனம் ஜூலை மாதம் சுமார் 6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை மட்டுமே சேர்த்துள்ளது.

அதோடு நில்லாமல் இந்தப் பட்டியலில் ஜியோவுக்கு அடுத்து வரும் 4 நிறுவனங்களின் எண்ணிக்கையைக் கூட்டினால் கூட ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அருகில் கூட நெருங்க முடியாத அளவில் இருக்கிறது. ஜியோவில் சேர்ந்துள்ள புதிய வாடிக்கையாளர்களில் பாதிக்கு மேல் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.