ஒரே மாதத்தில் இந்தியாவில் ரூ.49 ஆயிரம் கோடி முதலீடு செய்த அன்னிய நிறுவனங்கள்

 

ஒரே மாதத்தில் இந்தியாவில் ரூ.49 ஆயிரம் கோடி முதலீடு செய்த அன்னிய நிறுவனங்கள்

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அன்னிய நிறுவனங்கள் நேரடியாக சுமார் ரூ.48 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்தார்.

சாலை, போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள நமக்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படுகிறது. அதற்கு அன்னிய நேரடி முதலீடு உதவிக்கரமாக இருக்கிறது. இந்தியாவில் அன்னிய நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஸ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

பியுஸ் கோயல்

அதில், 2018-19ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடாக சுமார் ரூ.4.44 லட்சம் கோடி முதலீடு செய்து இருந்தன. இது 2017-18ம் நிதியாண்டை காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். இந்த நிதியாண்டின் முதல் மாதத்தில் மட்டும் (ஏப்ரல்) இந்தியா சுமார் ரூ.49 ஆயிரம் கோடியை ஈர்த்துள்ளது. இது 2018 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் சுமார் 3 சதவீதம் (ரூ.47 ஆயிரம் கோடி) அதிகமாகும்.

அடிப்படை கட்டமைப்பு

கடந்த நிதியாண்டில் மொத்தம் 59 அன்னிய நேரடி முதலீடு திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5 அன்னிய நேரடி முதலீடு திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது என  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.