ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

 

ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச்சந்தைகள் பலத்த அடி வாங்கின. இன்று மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.3.39 லட்சம் கோடியை இழந்தனர். சென்செக்ஸ் 793 புள்ளிகள் குறைந்தது.

2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பங்குச் சந்தை முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. இதனால் இந்திய பங்குச் சநதைகளில் வர்த்தகம் மோசமாக இருந்தது. இதுதவிர, அமெரிக்க பெடரல் வங்கி கடனுக்கான வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் மங்கி விட்டது. சர்வதேச பங்குச் சந்தைகளில் இதன் தாக்கம் வெளிப்பட்டது.

பங்குச் சந்தை

இதுதவிர, ஈரானின் அணு ஒப்பந்தம் தொடர்பான பதற்றத்தால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலையில்லாமல் இருந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை குறைக்க தொடங்கி இருப்பதும் இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் யெஸ் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் டி.சி.எஸ். ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டுமே உயர்ந்தது. அதேசமயம் மாருதி, எல் அண்டு டி, ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், சன்பார்மா என மீதமுள்ள 27 நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தது. 

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 571 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,953 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 145 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று ரூ.147.96 லட்சம் கோடியாக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.151.35 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 792.82 புள்ளிகள் வீழ்ந்து 38,720.57 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 252.55 புள்ளிகள் குறைந்து 11,558.60 புள்ளிகளில் நிலை கொண்டது.