ஒரு நேரத்துல எப்படி இருந்தது? இப்பம் இப்படி ஆயிட்டே! யெஸ் பேங்க் பெயரை கேட்டாலே அலறும் முதலீட்டாளர்கள்

 

ஒரு நேரத்துல எப்படி இருந்தது? இப்பம் இப்படி ஆயிட்டே! யெஸ் பேங்க் பெயரை கேட்டாலே அலறும் முதலீட்டாளர்கள்

ஒரு நேரத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி யெஸ் பேங்க் பங்கின் நிலை தற்போது மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

2005 ஜூலையில் ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் ஆகியோர் தனியார்  வங்கியான யெஸ் பேங்க் வங்கியை தொடங்கினர். குறுகிய காலத்திலேயே சிறப்பான வளர்ச்சி கண்டு வந்தது யெஸ் பேங்க். 2008ல் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் அசோக் கபூர் உயிர் இழந்தார். இதனையடுத்து ரானா கபூர் தலைமையில்தான் வங்கி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேசமயம் அசோக் கபூர் மரணத்துக்கு பிறகு வங்கியில் அடுத்தடுத்து பிரச்னைகள் வர தொடங்கின.

அசோக் கபூர்

ஒரு நேரத்தில் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், இந்தியாவின் 6வது பெரிய தனியார் வங்கியாக யெஸ் பேங்க் இருந்தது. 2018 ஆகஸ்ட் மாதத்தில் யெஸ் பேங்க் விலை அதிகபட்சமாக ரூ.404-ஆக உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு அந்த பங்கின் விலை உயரவே இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு யெஸ் பேங்கின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து ரானா கபூர் விலகினார். 

ராணா கபூர்

இருப்பினும், ரானா கபூரை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் கடந்த ஜனவரியில் ரிசர்வ் வங்கி அதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. அலுவலக காரணங்களால் அதற்கான காரணத்தை ரிசர்வ் வங்கி வெளியே  சொல்லவில்லை. இருப்பினும், நிர்வாக குறைபாடுகள் மற்றும் மோசமான இணக்கம் போன்ற காரணங்களால்தான் அவருக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் யெஸ் பேங்க் பங்கு வைரம் போன்றது ஒரு நாளும் அதனை விற்பனை செய்ய மாட்டேன் என முன்பு கூறியிருந்த ரானா கபூர் கடந்த சில மாதங்களாக தன் வசம் பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை  செய்து வருவது பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 26-27 தேதிகளில் யெஸ் கேப்பிட்டல், மோர்கன் கிரெடிஸ் மற்றும் ரானா கபூர் ஆகியோர் மொத்தம் 2.16 சதவீத பங்குகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ததாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.

ரிசர்வ் வங்கி

தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததால் யெஸ் பேங்கிலிருந்து ராணா வெளியேற போவதாக வதந்தி பரவியது. இதனால் நேற்று யெஸ் பேங்கின் விலை பலத்த அடி வாங்கியது. நேற்று ஒரே நாளில் பங்கின் விலை சுமார் 23 சதவீதம் சரிந்து ரூ.32-ஆக குறைந்தது. தற்போது யெஸ் பேங்க் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.8,161 கோடியாக சுருங்கி விட்டது. ஸ்மால்கேப் பங்கு போல் அதன் நிலைமை மாறி விட்டது. இந்த பங்குகளில் முதலீடு செய்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.