ஒரு காருக்கு பெயர் வைப்பதில் இவ்வளவு அக்கப்போரா…!

 

ஒரு காருக்கு பெயர் வைப்பதில் இவ்வளவு அக்கப்போரா…!

நவீன இந்தியாவின் முதல் கார் கம்பெனியான மாருதி வந்தபோது ராமதூதனான அனுமன் பெயரையே சூடிக்கொண்டது.இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது

கார் கம்பெனிகள் பெரும்பாலும் அதை உருவாக்கிய மனிதர் அல்லது தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரையே கொண்டிருக்கும்.புதிய மாடல் ஒன்றை களத்தில் இறக்கும்போது அதற்கு கவர்ச்சியான பெயர் வைப்பது அவசியம். அந்தப் பெயர் சொல்ல எளிதாக இருப்பதுடன் நேர்மறையான பொருள் தருகிற மாதிரி இருக்க வேண்டியது அதைவிட முக்கியம்.

கார்கள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் அறிமுகமாயின போர்டும், ஜெனரல் மோட்டாரும் களமிறங்கியதைத்  தொடர்ந்து ஐரோப்பாவிலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் உருவாயின.

கமாண்டர்

ஆரம்பத்தில் பகட்டான,மிரட்டலான பெயர்களையே தேர்ந்தெடுத்து வைத்து அழகு பார்த்தார்கள்.இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி போர் பதட்டத்திலேயே கழிந்ததால் கார்களின் பெயரில் அது எதிரொலித்தது. உதாரணமாக ஸ்டுடிபேக்கர் கம்பெனி தன் கார்களுக்கு,கமாண்டர், பிரசிடெண்ட், ஏன் டிக்டேட்டர் என்றுகூட பெயர் வைத்தது.

இந்தியாவில் கார் அறிமுகமானபோது பெரும்பாலும்  அமெரிக்க இங்கிலாந்து இறக்குமதி ரகங்கள்தான்.முதல் இந்திய கார் கம்பெனியான இந்துஸ்தான் மோட்டார்ஸ் களமிறங்கிய போது இந்தியர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்தது.லேண்ட் மாஸ்டர் ( நிலத்திம் தலைவன்) அம்பாசிடர் ( வெளிநாட்டு தூதர்) காண்டசா ( இத்தாலிய மொழியில் சீமாட்டி) என்றெல்லாம் பெயர்கள் வைத்தது.

அம்பாசிட்டர்

நவீன இந்தியாவின் முதல் கார் கம்பெனியான மாருதி வந்தபோது ராமதூதனான அனுமன் பெயரையே சூடிக்கொண்டது.இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.உலக மார்கெட்டில் போட்டி போட வேண்டி இருப்பதால் பொதுப்பெயர்கள் தேவைப்படுகின்றன.அந்த டிரண்டை முதலில் துவக்கியது நம் நாட்டில் வோக்ஸ்வாகன் என்று தவறாக அழைக்கப்படும் ஃபோக்ஸ்வாகன் தான்.அந்தச் சொல்லுக்கு டட்ச் மொழியில் மக்களின் வண்டி என்று பொருள்.

மாருதி

இப்போதெல்லாம்கார்களின் பெயரைச் சொல்லும் போதே  ஸ்டைலிஷாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில், மற்ற மொழிகளில் அந்தப் பெயர் கெட்ட வார்த்தையாக இருக்கக்கூடாது அவளவுதான்.உதாரணமாக ஓப்பல் கம்பெனி தனது புதிய மாடல் ஒன்றுக்கு நோவா என்கிற பெயரை பைபிளில் இருந்து தேர்வு செய்தது.ஆனால் அந்த சொல்லுக்கு ஸ்பானிஷ் மொழியில் ‘போகாது’ என்று பொருள் என்பதை அறிந்ததும்,கோர்ஸா என்று மாற்றிவிட்டது.

ஒப்பல் கோர்ஸா

இப்படித்தான் ஹோண்டா ஒரு புதுமாடலுக்கு ‘ஃபிட்டா’ என்று பெயரிட்ட பிறகுதான் அது சீனமொழியில் ‘வசவு’ என்று அறிந்து ‘ஜாஸ்’ என்று பெயரை மாற்றிவிட்டது.

டொயொடா ஒரு படி மேலே போய் பொருளே உல்லாத ‘கேம்ரி’ என்கிற பெயரை வைத்து விட்டது.ஃபோர்ட் கம்பெனிக்கு ஓ என்கிற ஆங்கில எழுத்தில் தன் மாடல்களுக்கு பெயர் வைப்பது ஒரு செண்டிமெண்ட்.போர்டின் ‘ஃபிகோ’வெல்லாம் அப்படி வைக்கப்பட்ட பெயர்தான்.

ஆனால்,அதற்கு ‘கூல்’ என்று பொருளாம்.ஹுண்டாய் இந்தியாவில் இறக்கிய முதல் மாடல் ‘சான்றொ’ நினைவிருக்கிறதா? அதற்கு உறுதி என்று அர்த்தமாம்.’ஹுண்டாய்’ என்றால் கொரிய மொழியில் ‘நவீனம்’ என்று பொருளாம்.

இப்போது சீனாவில் ஒரு கார் அறிமுகமாகி இருக்கிறது.அதன் பெயர் ‘Trumpuchi’!.அமெரிக்க ஜனாதிபதியின் பெயர்.இதுவும் அமெரிக்காவுக்கு புதிதில்லை! அந்தக் காலத்திலேயே ’லிங்கன்’ என்கிற பெயரை ஒரு சொகுசுக் காருக்குச் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்கள்.இங்கேயும் விரைவில் ‘ மோடி’ என்கிற பெயரில் ஒரு எஸ்யுவி வரலாம்…யார் கண்டது!?