ஒரு அத்திவரதரும் பல அவஸ்தைகளும்… பக்தரின் நேரடி ரிப்போர்ட்…

 

ஒரு அத்திவரதரும் பல அவஸ்தைகளும்… பக்தரின் நேரடி ரிப்போர்ட்…

ஆன்மீகமோ அறிவியலோ ஏதோ ஒன்றில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு நடக்கிறதென்றால் எப்போதும் கவனம் ஈர்க்கப்படும். இன்றைய அறிவியல் தொழில்நுட்பம், சமூக வலைதளங்கள், மீடியாக்கள் அதை எதிர்பார்த்ததை விட இன்னும் அதிக கவனத்துக்கு உள்ளாக்குகின்றன. ஏதாவது ஒருவகையில் மக்களின் பார்வையை அதன் பக்கம் நோக்கி திருப்புகின்றன.

athivarathar

40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் நிகழ்வும் அப்படித்தான். அத்தி வரதர் யார், அதன் பின்னணி என்ன, அதன் வரலாறு, அதன் எதிர்காலம் எல்லாம் பலவாறாக ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டன அதன் பலனைத்தான் நேற்று காஞ்சிபுரமும், இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும் வந்து குவிந்த மக்களின் கூட்டமும் உணர்த்தின.

athivarathar

பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும் என்பது பலரும் அறிந்தது ஆகையால் அதிகாலையிலேயே சென்று சாமிதரிசனம் முடித்து வரலாம் என பலரும் நினைப்பதுண்டு ஆனால் நேற்று மட்டும் அதை எல்லோருமே நினைத்திருப்பார்கள் போல. பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற இதிகாச நாவல்களில் வரும் ஊர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பயணித்து அதன் பொருட்டு கதையில் வரும் காட்சிகளை நினைவுகளில் பொறுத்திப்பார்ப்பதில் அலாதி பிரியமுண்டெனக்கு.

athivarathar

அப்படித்தான் இந்த வாய்ப்பையும், இந்த வார விடுமுறையையும் பயன்படுத்திக்கொள்ள இரண்டு நாட்களுக்கு முன்னால் முடிவெடுத்து நானும் நண்பரும் கிளம்பினோம். அதிகாலை 5மணிக்கு தயாராகி பெருங்களத்தூர் பேருந்து நிலையம் போனால் வரும் எல்லா காஞ்சிபுரம் பேருந்துகளிலும் படிகளில் நிரம்பி வழிந்தது கூட்டம். சரி இனி தாமதிக்க வேண்டாமென முடிவெடுத்து அடுத்து வந்த பேருந்தில் ஏறி நின்றுகொண்டே பயணித்து 7 மணிக்கு கோவிலை அடைந்தோம் காலை உணவை ஒரு தள்ளுவண்டியில் முடித்துவிட்டு, கிழக்கு கோபுரத்தின் வழியாக வரிசையில் நின்றோம். ஒரு வரலாற்று சிறப்புமிக்க கொடுமையான சம்பவம் எங்கள் வாழ்வில் நடக்கப்போகிறது என்பதையறியாமல்.

athivarathar

வரிசை என்றால் ஒருவர் இருவர் அல்ல 10க்கு மேற்பட்டவர்கள் பக்கவாட்டில் நிற்கும்படி அந்த வரிசையிருந்தது, 10 பேர் நிற்கக்கூடிய இடத்தில் 40 பேர் நிற்கிறோம். 8 மணிக்கு நின்ற வரிசை வெறும் 100 மீட்டரைக் கடந்திருந்த போது மணி 11 சூரியன் இன்று மட்டும் பகலிலேயே ஓவர் டைம் பார்ப்பது போல கொளுத்தி எடுக்கிறார். நல்ல உச்சி வெயில், ஒரு பந்தலில்லை, ஒரு ஃபேன் இல்லை, ஒதுங்க ஒரு நிழல் இல்லை, ஈரமான கைக்குட்டையில் வியர்வை துடைக்க முடியவில்லை, கூட்டத்தில் இருந்து வெளியேறவும் வழியில்லை, கழிப்பிட வசதிகள் இல்லை, குழந்தைகள் படும் அவஸ்தைகளை சொல்ல சொற்களும் இல்லை. மக்கள் எங்கிருந்து இப்படி வருகிறார்கள் என்றும் தெரியவில்லை. ஒரு 300 மீட்டர் தொலைவு போய் U டர்ன் போட்டு திரும்ப அதே வழியில் வருவதற்கு 5 மணி நேரம். சனிக்கிழமை என்பதால் எல்லா மக்களும் குடும்பம் சகிதமாக வாடகை வண்டிகளில் நிரம்பி வந்து குவிந்து விட்டார்கள். அங்கங்கே குழந்தைகள் கதறுகின்றன, பெண்கள் மயங்கிச் சரிகிறார்கள், வயதானவர்கள் நிற்க முடியாமல் பரிதவிக்கிறார்கள். வயதுப்பெண்கள் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஒருவழியாக 5 மணிநேரம் கழித்து கோபுரத்திற்கு முன்னால் உள்ள பந்தலை அடைந்தபோது யாரோ சிலர் கொடுத்த பிஸ்கட், வாட்டர் பாட்டில்களை காவல்துறை வினியோகித்துக் கொண்டிருந்தனர். கோபுரத்தின் நுழைவு வாயிலுக்கும் பந்தல் தொடங்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளி 200 மீட்டர் இருக்கும் அதை கடக்கவே 2 மணி நேரமானது. ஜிக் ஜாக் போல 200க்கு மேற்பட்ட தடுப்புகள்.

athivarathar

கோபுர நுழைவு வாயிலை அடைந்ததும் இனி வேகமாக சென்றுவிடும் என நினைத்த போது அடுத்த வரிசைகள் அழுங்காமல் தள்ளி விட்டார்கள் அதைக்கடக்க மேலும் 2 மணிநேரங்கள், அதிலிருந்து கோவிலின் பிரதான சுற்றுவட்டத்தை தொட்ட போது அங்கே திருப்பிப்போட்ட “L” போல ஒரு பெரிய வரிசை அதைக்கடக்க 2 மணி நேரம், இறுதியாக படாத பாடு பட்டு படுத்தநிலையில் இருந்த அத்தி வரதரை 2 நொடிகள் மட்டுமே பார்க்க முடிந்தது. காலை 8 மணிக்கு வரிசையில் நின்று இரவு 7 மணிக்கு அத்தி வரதரை பார்த்தோம். இடையில் உணவு இல்லை, கழிவறை செல்லவில்லை, 10நிமிடம் உட்காரவில்லை, எங்கேயும் இடையில் நுழையவில்லை, சாமி பார்த்ததும் ஒரு விபூதி, குங்குமம் இல்லை, பல இன்னல்களைச் சுமந்து இந்தநாள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாளாய் மாறிப்போனது. எனக்கு மட்டுமல்ல நேற்று வந்திருந்தவர்களில் கிட்டத்தட்ட 14, 15 மணி நேரங்கள் வரிசையில் நின்று சாமி பார்த்தவர்களும் உண்டு. அவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் வரும் காலம் வரை மறக்கவே முடியாத அவஸ்தையாக இது நிச்சயம் இருக்கும்.

athivarathar

என் அருகில் இருந்த 60வயது மதிக்கத்தக்க அம்மாவிடம் “நீங்கள் கடந்தமுறை இதை பார்க்கவில்லையா?” எனக்கேட்ட போது “இப்படி ஒரு விஷயம் நடக்கிறதே இப்போதாப்பா வெளிய தெரியுதுனு சொன்னாங்க”. இப்போது போல 1979ல் இத்தனை வசதிகள் இல்லை, சமூக வலைதளங்கள், ஊடகங்கள், வைரலாக பரவும் விபரங்கள், குறிப்பாக மக்கள் தொகை இவ்வளவு இல்லை. இதுதான் அரசாங்கமும், அறநிலையத்துறையும், காவல்துறையும் சரியான நடவடிக்கைகள், தேவைகளை முன்னெடுக்கதவறிய காரணங்களும் கூட. விடுமுறை நாளில் மக்கள் கூட்டம் எவ்வளவு இருக்கும், எந்தெந்த வழியாக வருவார்கள், என்னென்ன வசதிகள் செய்யவேண்டும், எந்த வழிகளில் அவர்களை அனுப்ப வேண்டும் என பல விஷயங்களில் குளறுபடி செய்திருக்கிறார்கள். இத்தனை கூட்டத்தையும் சமாளிக்க, விரைவாக அனுப்ப, வேண்டிய அத்தியாவசிய உதவிகளை செய்ய பண வசதியும், ஆள் வசதியும் இருக்கிறது ஆனால் சரியான திட்டமிடல் இல்லை. ஜீலை1ல் வைத்தார்கள் அத்தி வரதரை 13 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பல விஷயங்களை செய்யாமலே கோட்டை விட்டிருக்கிறார்கள் அதுவே மக்கள் அவதிப்பட முக்கிய காரணம். 2500 போலீஸ் போடப்பட்டிருப்பதாய் சொல்கிறார்கள் ஆனால் அத்தனை பேர் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை, விடுமுறை நாட்களிலாவது சிறப்பு பேருந்துகள் விடலாம் அதுவும் இல்லை. “திருப்பதியில் இல்லாத கூட்டமா இங்கு வந்துவிடப்போகிறது?” என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, திருப்பதியில் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் வந்தாலும் காற்றோட்டமான அறைகள், குளிர்பானங்கள், பால், தண்ணீர், உணவு, கழிப்பிட வசதி என எல்லாமே கிடைத்துக்கொண்டே இருக்கும். இங்கு 1 லட்சம் பேரை சமாளிக்க முடியாமல் திணருகிறார்கள். 
தங்களுக்கு வேண்டியவர்களை அலுங்காமல் குழுங்காமல் போய் பார்த்து வர என்னவேண்டுமானாலும் செய்கிறார்கள் பொது மக்களை அப்படி மதிப்பதில்லை. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் ஓட்டு போட்ட தப்பை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது அதைபேசி ஒருபயனும் இல்லை.

athivarathar

அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என்றாலும் இந்த கூட்டத்தில் இருந்து எடுத்துக்கொள்ள எனக்கு அத்தனை விஷயங்கள் கிடைத்தன. கொதிக்கும் வெயிலில் அழும் பையனை பொறுமையிழந்த ஒரு அப்பன் பளீர் பளீரென அடிக்கிறார், கூட்டத்தில் தொலைந்த தன் மகனை இன்னொரு தாய் தேடியபடி அலைகிறார், நான்கு மாத குழந்தையை ஒரு கையிலும் மனைவியை மறுகையிலும் பிடித்து வந்த கணவன் வெயில் தாங்காமல் வெறுத்து சிரமப்பட்டு வெளியேறுகிறார், வரும் எல்லோருக்கும் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கிறார் ஒரு உள்ளூர்வாசி. மயங்கிசரிந்த தன் 60 வயது மனைவியை ஓரமாக உட்காரவைத்து 70 வயது கணவன் ஒரு அட்டையை விசிறியாக்கி வீசிக்கொண்டிருக்கிறார், நான் பார்க்கும் போதே அதே இடத்தில் மயங்கிய ஒரு 30 வயது பெண்ணுக்கும் சேர்த்து விசிறி விடுகிறார். தூங்கி விழும் தன் குழந்தைகளை தாங்கிப்பிடித்தபடி பலர் விழித்திருக்கிறார்கள், காணாமல் போன உறவுகளை மைக் செட் வழியே அழைத்துக்கொண்டிருக்கிறார்கள், கோவிலுக்கு உள்ளே ஆண்கள் மதில் சுவரையொட்டியும், குழந்தைகளும் பெண்களும் மரம், செடிகளுக்கு பின்னே சிறுநீர் கழிக்க ஒதுங்கியதும் மனதை என்னவோ செய்தது, சாமிக்கு மிக அருகில் வந்து சண்டையிட்டுக்கொள்கிறார்கள் பெண்கள்.

athivarathar

ஒரு கட்டத்தில் வெளியே U டர்ன் போடுமிடத்தில் பொறுமையும், சக்தியும் இழந்து, வெளியேறி விடலாமா என நினைக்கையில் தன் அப்பாவின் தோழ்களில் அமர்ந்தபடி சுற்றி இருக்கும் மனிதக்கூட்டத்தை பார்த்து எதையோ நினைத்து அழகாய் அப்படி ஒரு சிரிப்பு சிரித்த ஒரு குழந்தையின் சிரிப்பில் இருந்து கொஞ்சம் எடுத்து எனக்குள் ஊற்றிக்கொண்டு முன்னேறிப்போனேன். சோர்வு வரும் இடங்களில் எல்லாம் சுற்றியிருக்கும் குழந்தைகளின் முகத்தில் வழியும் மொழிகளையும், வலிகளையும் எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருந்தோம்.

வாழ்க்கையும் அப்படித்தான் சோர்வுறும் சமயங்களில் சுற்றியிருப்பவர்களைப் பாருங்கள் ஏதாவது ஒருவகையில் தானாக நகரத்தொடங்கலாம். தொடர்ந்து நகர்தல் தானே வாழ்க்கை.

—தனபால் பவானி
14.07.2019