ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்து 1 லட்சம் ரூபாய் மோசடி

 

ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்து 1 லட்சம் ரூபாய் மோசடி

ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்து பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவர் ஒரு பெண்ணிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

காதலின் பேரில் மோசடி 

பாதிக்கப்பட்ட பெண் இது பற்றி அளித்துள்ள புகாரில், ” இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிம்மில் ராஜ் குமாரை சந்தித்தேன். அவர் ஐ.பி.எஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நட்பாகப் பழகத் தொடங்கிய பின், ஒரு நாள் ராஜ்குமார் காதலிப்பதாகக் கூறினார். ஆனால், தனக்கு புற்றுநோய் இருப்பதால் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறினார். பின்னர் தான் இறப்பதற்குள் என்னை ஒரு அரசு அதிகாரியாகப் பார்க்க விரும்புவதாகவும் கூறினார். அதை நம்பி அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் தந்தேன்.” என்று கூறியுள்ளார்.

ஆனால், அதன் பின்பு எந்தத் தகவலும் இல்லாமல் போகவே, அந்தப் பெண் சமூகவலைத்தளங்களில் ராஜ்குமாரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், ராஜ் குமார் பதில் அளிக்கவில்லை.

cheating case

பல ஆண்டுகளாக தொடரும் மோசடி 

திடீரென்று ஒரு நாள், அந்தப் பெண் பணி  புரியும் இடத்திற்கு சென்ற ராஜ் குமார், சந்திக்க வருமாறு வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவும் அங்கே தகராறில் ஈடுபட்ட ராஜ் குமாரைத் தடுக்க வந்த காவலாளிகளிடம் தான் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், என்னைச் சந்திக்க வராவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வருமென்றும் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.

இது பற்றி அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அன்றே ராஜ்குமாரை கைது செய்துள்ளனர். விசாரணையில் தான் ஓட்டுநராக பணியாற்றி வருவதாக அவர் கூறியுள்ளார்.

2013 – ஆம் ஆண்டே காவல்துறை உதவி ஆய்வாளர் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ராஜ் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.