ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 6 அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 6 அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் தொடங்கியது.

துபாய்: இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் தொடங்கியது.

ஆசிய நாடுகள் இடையே நல்லுறவை வளர்க்கும் நோக்கில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முதன் முதலில் 1984-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன் முதல் தொடரில் இந்தியா கோப்பை வென்றது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தொடர் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர்-4 சுற்றை எட்டும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். அதில் இருந்து டாப்-2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்த தொடரில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் ஷர்மா ஆசிய போட்டியில் இந்திய அணியை வழிநடத்துகிறார். இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஹாங்காங்குடன் (18-ந்தேதி) மோதுகிறது.

அதைத் தொடர்ந்து அடுத்த நாளே  (19-ந்தேதி) இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இத்தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கை – வங்காளதேச அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.