ஐஎஸ்எல் கால்பந்து 2018: மும்பையை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

 

ஐஎஸ்எல் கால்பந்து 2018: மும்பையை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது

கவுகாத்தி: ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்நிலையில், மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதிய ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் ஜாம்ஜெட்பூர் வீரர் மரியோ ஆர்கஸ் கோல் அடித்து முதலாவது கோலை அந்த அணிக்கு பெற்று தந்தார். தொடந்து கோல் அடிக்கக் தீவிரமாக போராடிய மும்பை அணிக்கு 51-வது நிமிடத்தில் வாய்ப்பு கிட்டியது. ஆனால், ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுபாசிஸ் ராய் முன்னோக்கி வந்து பந்தை காலால் தடுத்து வெளியே தள்ளினார்.

இதையடுத்து, மும்பை அணியின் கோல் போடும் முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியாக 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது. டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-புனே சிட்டி அணிகள் மோதவுள்ளன.