ஏழைக்களிடம் அராஜகம்: எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்ட நகராட்சி ஆணையர்!

 

ஏழைக்களிடம் அராஜகம்: எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்ட நகராட்சி ஆணையர்!

வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை எட்டி உதைத்தும் சாலையில் தூக்கி வீசியும் அராஜக செயலில் ஈடுப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் சாலையோர வியாபாரிகள் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை எட்டி உதைத்தும் சாலையில் தூக்கி வீசியும் அராஜக செயலில் ஈடுப்பட்டார். இதற்கான வீடியோ இணையத்தில் வெளியாகி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

இதுகுறித்து   திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், “வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற  செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கடுமையாக சாடினார். இதுபோன்று பலரும்  நகராட்சி ஆணையர் சிசில் தாமஸூக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் எதிர்ப்புகள் வலுவடைந்து வந்த நிலையில்  நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல் கொரோனா  வைரஸ் சமூக தொற்றாக பல்வேறு பகுதிகளில் பரவக்கூடிய நிலை வாணியம்பாடி பகுதியிலும் ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இச்செயலை செய்துவிட்டேன். இதற்காக வருந்துகிறேன்” என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட தள்ளுவண்டி கடை உரிமையாளர்களிடமும் அவர் நேரில் மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.