ஏழைகளுக்கு இலவச கொரோனா பரிசோதனை! – வேலூர் சி.எம்.சி அறிவிப்பு

 

ஏழைகளுக்கு இலவச கொரோனா பரிசோதனை! – வேலூர் சி.எம்.சி அறிவிப்பு

ஏழைகளுக்கு, தகுதி வாய்ந்த நோயாளிகளுக்கு இலவசமாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று வேலூர் சி.எம்.சி மருத்துவமனை தெரிவித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வேலூர்: ஏழைகளுக்கு, தகுதி வாய்ந்த நோயாளிகளுக்கு இலவசமாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று வேலூர் சி.எம்.சி மருத்துவமனை தெரிவித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பைத் தடுத்து நிறுத்த ஒரே வழி, பரிசோதனை செய்துகொண்டே இருப்பதுதான். பரிசோதனையில் பாஸிடிவ் என்று வந்தால் அவர்களுக்கு உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். அறிகுறி, சந்தேகத்தோடு வருபவர்கள் மட்டுமல்ல யாரையும் விடாதீர்கள், கொரோனா பாதிப்பு உள்ள பகுதியில் அனைவருக்கும் பரிசோதனை செய்யுங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஆனால், இந்தியாவிலே கொரோனா பரிசோதனை செய்ய வசதி இல்லை. சீனாவில் கடந்த ஜனவரி மாதம் பரவிய நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பரிசோதனை செய்ய மையம் அமைத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில் தற்போதுதான் கொரோனா பரிசோதனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ttn

தமிழகத்தில் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு ரூ.4500 கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வேலூர் சி.எம்.சி ஏழைகள், தகுதி வாய்ந்தவர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “வேலூர் சி.எம்.சி இயக்குநர் டாக்டர் ஜெ.வி.பீட்டருடன் பேசினேன். அவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 150 படுக்கையுடன் பிரத்தியேக மையம் தயாராக உள்ளது என்று கூறினார். மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதித்த கொரோனா பரிசோதனை ஆய்வுக் கூடத்தில் ஏழைகள், தகுதி வாய்ந்த நோயாளிகளுக்கு இலவசமாகவே பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், மற்றவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைப்படி ரூ.4500 கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்” என பதிவிட்டுள்ளார்.

ரூ.4500 மதிப்பிலான கொரோனா பரிசோதனை ஏழைகளுக்கு இலவசமாக நடத்தப்படும் என்று வேலூர் சி.எம்.சி அறிவித்துள்ளது. ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக இந்த கல்லூரி தொடங்கப்பட்டது, அதிக கட்டணம் செலுத்தி மருத்துவக் கல்வியை வழங்க விரும்பவில்லை, எனவே, நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்து சேவை மனப்பான்மை உள்ளவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.எம்.சி கோரிக்கை விடுத்தது. சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் சி.எம்.சி-யின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.