ஏலத்தில் வெற்றி; அதானி குழுமத்தின் கைகளுக்கு போகும் ஐந்து விமான நிலையங்கள்!!

 

ஏலத்தில் வெற்றி; அதானி குழுமத்தின் கைகளுக்கு போகும் ஐந்து விமான நிலையங்கள்!!

மங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்களை மேம்படுத்திப் பராமரிக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது அதானி குழுமம்

புதுதில்லி: மங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்களை மேம்படுத்திப் பராமரிக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது அதானி குழுமம்.

அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கௌகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை மேம்படுத்திப் பராமரிப்பதற்கான பணிகளைத் தனியாரிடம் விட முடிவுசெய்த இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), இதற்கான ஒப்பந்தத்தை கோரியது.

இந்நிலையில், கவுகாத்தி விமான நிலையம் தவிர்த்து, இதர விமான நிலையங்களுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில், அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஐந்து விமான நிலையங்களை மேம்படுத்திப் பராமரிக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் கைப்பற்றியது.

திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கான ஏலத்தில், பயணி ஒருவருக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.135 தருவதாக கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகமும், ரூ.63 தருவதாக ஜிஎம்ஆர் நிறுவனமும் கோரியிருந்தது. ஆனால், பயணி ஒருவருக்கு ரூ.168 தருவதாக அதானி குழும கோரியிருந்தது.

அதேபோல், அகமதாபாத் விமான நிலையத்துக்கான ஏலத்தில், பயணி ஒருவருக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.85 தருவதாக ஜிஎம்ஆர் நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில், பயணி ஒருவருக்கு ரூ.177 தருவதாக அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இப்படி ஐந்து விமான நிலையங்களுக்கும் அதிக பட்ச தொகையை கோரிய அதானி நிறுவனம் ஒப்பந்தத்தில் வெற்றி பெற்று அதனை கைப்பற்றியுள்ளது.