ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை கட்…. பழைய பாக்கி தராததால் பொறுமை இழந்த எண்ணெய் நிறுவனங்கள்…..

 

ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை கட்…. பழைய பாக்கி தராததால் பொறுமை இழந்த எண்ணெய் நிறுவனங்கள்…..

நம் நாட்டில் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஏர் இந்தியா. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனம் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு சுமார் ரூ.55 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.3,500 கோடி பாக்கி வைத்துள்ளது.

ஏர் இந்தியாவை இதற்கு மேலும் நம் கையில் இருந்தால் மேலும் நஷ்டம் ஏற்படும் என கருதிய மத்திய அரசு அந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய தீவிர முயற்சி வருகிறது. இந்த சூழ்நிலையில், பாக்கி தொகையை தராததால் கொச்சி, புனே, பாட்னா, ராஞ்சி, வைசாக் மற்றும் மொகாலி விமான நிலையங்களில் ஏர் இந்தியா  விமானங்களுக்கு எரிபொருள் சப்ளையை எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் நேற்று மாலை கட் செய்து விட்டன.

எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் எரிபொருள் சப்ளை வழங்க மறுத்து விட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இருப்பினும், ஏர் இந்தியா விமானங்கள் இரு மடங்கு எரிபொருள் அப்லோடு செய்து இருந்ததால் அந்த விமான நிலையங்களிலிருந்து ரிட்டன் சேவை பாதிக்கவில்லை.  இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மாலையில் ரூ.60 கோடி பணம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது என நாங்கள் நம்புகிறோம் மற்றும் விமானங்களை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க எங்களால் முடியும் என கூறினார்.

கடந்த மாதம் பாக்கி தொகையை தராததால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எரிபொருள் சப்ளையை நிறுத்த போவதாக ஏர் இந்தியாவை மிரட்டியது. உடனே விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தலையிட்டதால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலைமை பார்க்கும் போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஏற்பட் நிலைதான் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.