ஏரோ இந்தியா விமான கண்காட்சி; அஜித்தின் தக்ஷா குழு 3 பிரிவுகளில் வெற்றி

 

ஏரோ இந்தியா விமான கண்காட்சி; அஜித்தின் தக்ஷா குழு 3 பிரிவுகளில் வெற்றி

ஏரோ இந்தியா கண்காட்சியின் ஓர் அங்கமான ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில், நடிகர் அஜித்தின் தக்ஷா குழு 3 பிரிவுகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது

பெங்களூரு: ஏரோ இந்தியா கண்காட்சியின் ஓர் அங்கமான ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில், நடிகர் அஜித்தின் தக்ஷா குழு 3 பிரிவுகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

நடிகர் அஜித் சினிமாவை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல், புகைப்பட கலைஞர், ஹெலி டிசைனர், மெக்கானிக் என பல்வேறு  துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மோட்டார் பைக் பந்தயங்களில் ஆர்வமுள்ள அஜித் இதற்காக நடிப்பதை ஒத்திவைத்து விட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று போட்டிகளில் பங்கேற்று வந்தார். விமானம் ஓட்டுவதிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. விமானம் ஓட்டும் லைசென்சும் வாங்கி வைத்துள்ளார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இக்குழுவினர் தயாரித்த ஆளில்லா விமானங்கள் அதிக நேரங்கள் பறந்து ஏற்கனவே சாதனை படைத்திருந்தது. அதுதவிர தக்ஷா குழுவினர் பல்வேறு சாதனைகளையும் புரிந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் – 2018’ போட்டியில் கலந்து கொண்ட தக்ஷா குழுவினர், சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தனர்.

அந்த வரிசையில், பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா கண்காட்சியின் ஓர் அங்கமான ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில், நடிகர் அஜித்தின் தக்ஷா குழு 3 பிரிவுகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்பு துறை சார்பில், “ஏரோ இந்தியா – 2019” என்ற பெயரில் நடைபெறும் இந்த சர்வதேச விமான கண்காட்சி 24-ம் தேதி (நாளை) வரை நடைபெறவுள்ளது.

பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானங்கள் பங்கேற்றுள்ளன. இதன் ஓர் அங்கமாக ‘ட்ரோன் ஒலிம்பிக்ஸ்’ என்ற பெயரில் முதல் முறையாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், அஜித்தின் தக்ஷா குழுவினர் கலந்து கொண்டு, மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

4 கிலோவுக்கும் அதிகமான கண்காணிப்பு விமானப் பிரிவில் தக்ஷா அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து, ரூ.1.5 லட்சம் பரிசுத் தொகையையும், 4 முதல் 20 கிலோவுக்கு இடையிலான கண்காணிப்பு விமானப் பிரிவில், தக்ஷா முதலிடத்தைப் பிடித்து ரூ.3 லட்சம் பரிசுத் தொகையையும், பறக்கும் தொழில்நுட்ப சவால் பிரிவில், தக்ஷா அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து, ரூ.3 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளது.