ஏரோ இந்தியா கண்காட்சியில் தீ விபத்து; கார்கள் எரிந்து நாசம்!!

 

ஏரோ இந்தியா கண்காட்சியில் தீ விபத்து; கார்கள் எரிந்து நாசம்!!

ஏரோ இந்தியா கண்காட்சியின் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏராளமான கார்கள் தீக்கிரையாகின

பெங்களூரு: ஏரோ இந்தியா கண்காட்சியின் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏராளமான கார்கள் தீக்கிரையாகின.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்பு துறை சார்பில், “ஏரோ இந்தியா – 2019” என்ற பெயரில் நடைபெறும் இந்த சர்வதேச விமான கண்காட்சி 24-ம் தேதி (நாளை) வரை நடைபெறவுள்ளது.

பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில், 22 நாடுகளின் 61 அதிவேக போர் விமானங்களும், 165 கண்காட்சி மையங்கள் உட்பட 365 நிறுவனங்களின் மையங்களும் இடம் பெற்றன. இதில் விமானவியல் தொழில்நுட்பம் தொடர்பான கருவிகள், புதிய கண்டுபிடிப்புகள், முப்படைக்கும் தேவையான விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்று பிற்பகலில் ஏரோ இந்தியா கண்காட்சியின் கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வறண்டு கிடந்த புற்களில் பற்றிய தீ மளமளவென அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்களின் மீது பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் சுமார் நூற்றுக்கும் அதிகமான கார்கள் தீக்கிரையாகின. இந்த தீ விபத்தால் யாருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.