ஏம்பா எத்தன தடவ சொல்றத ஒட்டக பாலுல டீ போடுன்னு; நிறைவேறியது வடிவேலு ஆசை!!

 

ஏம்பா எத்தன தடவ சொல்றத ஒட்டக பாலுல டீ போடுன்னு; நிறைவேறியது வடிவேலு ஆசை!!

இந்தியாவில் முதன்முறையாக ஒட்டகப் பால் விற்பனையை அமுல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

காந்திநகர்: இந்தியாவில் முதன்முறையாக ஒட்டகப் பால் விற்பனையை அமுல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழ் திரைப்படமான ‘வெற்றிக் கொடி கட்டு’ திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு துபாயில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி அங்குள்ள விஷயங்களை சொல்லி அலுச்சாட்டியம் செய்யும் பொருட்டு காமெடி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு காமெடி சீனில் கடைக்கு டீ குடிக்க போகும் வடிவேலு, கடைக்காரரிடம், ‘ஏம்பா எத்தன தடவ சொல்றத ஒட்டக பாலுல டீ போடுன்னு…துபாய்ல லாம் ஒட்டகப் பாலுல தான் டீ போடுவாங்கன்னு’ சொல்லுவார். அதற்கு கடைக்காரர் ஒட்டகப் பாலுக்கு நான் எங்க போறது என கூறுவார்.

camelmilk

தற்போது, வடிவேலுவின் அந்த ஆசை நிறைவேறியுள்ளது. எப்படின்னு கேக்குறீங்களா? இந்தியாவின் மிகப் பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் நிறுவனமான அமுல், முதன்முறையாக ஒட்டகப் பால் விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக குஜராத் மாநிலம் கட்ச் பகுதிகளில் இருந்து ஒட்டகப் பால் பெறப்படுவதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், முதற்கட்டமாக காந்திநகர், அகமதாபாத், கட்ச் பகுதிகளில் ‘அமுல் ஒட்டக பால்’ விற்பனையை தொடங்கியுள்ளது.

camelmilk

ஒட்டகப் பாலின் விலை, 500 மில்லி லிட்டர், ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பால் 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த உகந்ததாக இருக்கும் என்பதால் இதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்த முடியும்.

முன்னதாக, ஒட்டகப் பால் சாக்லேட்டை அறிமுகம் செய்த அமுல் நிறுவனம், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது ஒட்டகப் பாலையும் அறிமுகம் செய்துள்ளதாக தெரிகிறது. ஒட்டகப் பாலில் இன்சுலினுக்கு இணையான புரதம் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது என்றும், எளிதில் ஜீரணமாவது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது ஒட்டகப் பால் என்றும் கூறப்படுகிறது.