ஏமாற்றம் கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 189 புள்ளிகள் குறைந்தது…..

 

ஏமாற்றம் கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 189 புள்ளிகள் குறைந்தது…..

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 189 புள்ளிகள் குறைந்தது.

சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் போர், மீண்டும் உலக பொருளாதார சரிவு ஏற்படும் என்ற அச்சம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை போன்ற காரணங்களால் இன்று பங்கு சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.

பங்குச் சந்தை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மகிந்திரா, எச்.டி.எப்.சி., டி.சி.எஸ். மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐ.டி.சி. ஆகிய 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ் பேங்க், வேதாந்தா, டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் இண்டஸ்இந்த் பேங்க் உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 950 நிறுவன பங்குகளின் விலை  உயர்ந்தது. 1,589 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 145 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.54 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.48 லட்சம் கோடியாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 189.43 புள்ளிகள் சரிந்து 37,451.84 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 59.25 புள்ளிகள் வீழ்ந்து 11,046.10 புள்ளிகளில் நிலை கொண்டது.