ஏப்ரல் வருமானம் ரூ.2 ஆயிரம் கோடிதான்… அரசு ஊழியர்களின் சம்பளமோ ரூ.12 ஆயிரம் கோடி… ஆனாலும் சம்பளத்தை குறைக்காத உ.பி. அரசு..

 

ஏப்ரல் வருமானம் ரூ.2 ஆயிரம் கோடிதான்… அரசு ஊழியர்களின் சம்பளமோ ரூ.12 ஆயிரம் கோடி… ஆனாலும் சம்பளத்தை குறைக்காத உ.பி. அரசு..

ஏப்ரல் மாத வருமானம் நிலவரம் கவலைக்கிடமாக இருந்த நிலையிலும், 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தர பிரதேச அரசு ஒப்புதல் அளித்தது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி வாயிலாக மாதந்தோறும் சராசரியாக முறையே ரூ.5 ஆயிரம் கோடி மற்றும் ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்கும். ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள லாக்டவுனால் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியதால் கடந்த ஏப்ரல் மாதத்தில் உத்தர பிரதேச வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது.

ஓய்வூதியம் பெறும் பெண்மணி

கடந்த ஏப்ரல் மாதத்தில் உத்தர பிரதேசத்துக்கு ரூ.2,284 கோடி மட்டுமே வருவாயாக கிடைத்தது. அதேசமயம்  16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமாக மொத்தம் ரூ.12,500 கோடி வழங்க வேண்டும். வருவாய் நிலவரம் மிகவும் மோசமாக உள்ள நிலையிலும், கடந்த மே 1ம் தேதியன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்தார். பற்றாக்குறை தொகையை அரசு தனது கஜானாவிலிருந்து வழங்கும்.

நிதியமைச்சர் சுரேஷ் கன்னா

உத்தர பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் கன்னா கூறுகையில், வருவாய் குறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் மக்களின் வாழ்க்கையில் அரசு சமரசம் செய்து கொள்ளாது என தெரிவித்தார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே, மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான செயல் திட்டத்தை தயாரிக்க சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.