ஏப்ரல் மாத சம்பளம் ஒரு பைசா கூட குறையாம வழங்கப்படும்… இண்டிகோ முடிவு… பணியாளர்கள் ஹேப்பி…

 

ஏப்ரல் மாத சம்பளம் ஒரு பைசா கூட குறையாம வழங்கப்படும்… இண்டிகோ முடிவு… பணியாளர்கள் ஹேப்பி…

இண்டிகோ நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை முழுமையாக வழங்க முடிவு செய்துள்ளது. முன்பு பணியாளர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் வரை குறைக்கப்போவதாக இண்டிகோ அறிவித்து இருந்தது.

தொற்று நோயான கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை 40 நாட்கள் லாக்டவுனை அமல்படுத்தியுள்ளது. இதனால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதனால் பலர் வேலை வாய்ப்பை இழந்தனர்.

இண்டிகோ

வருவாய் இல்லாததால் அனைத்து துறைகளை சேர்ந்த நிறுவனங்களும் சம்பள குறைப்பு மற்றும் பணியாளர்கள் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி விட்டன. விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான இண்டிகோவும் கடந்த மாதம் ஜூனியர் பணியாளர்களை தவிர்த்து மற்ற பணியாளர்களின் தரப்படுத்தப்பட்ட ஊதியத்தில் 25 சதவீதம் வரை குறைக்கப்போவதாக அறிவித்தது.

ரோனோஜோய் தத்தா

இந்நிலையில் தற்போது பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் முடிவை இண்டிகோ நிறுவனம் மாற்றி கொண்டுள்ளது. இது தொடர்பாக இண்டிகோ தலைமை செயல் அதிகாரி ரோனாஜோய் தத்தா பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள இமெயிலில், லாக்டவுன் சமயத்தில் பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டாம் என்ற நமது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க, பணியாளர்களின் ஏப்ரல் மாத சம்பளம் குறைப்பு என்ற முந்தைய அறிவிப்பை செயல்படுத்த வேண்டாம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம். இருப்பினும், உங்களது மூத்த உறுப்பினர்கள் மற்றும் மூத்த வி.பி.க்கள் தாங்களாகவே இந்த மாத சம்பளத்தை குறைத்துள்ளனர். மற்ற அனைவருக்கும், உங்கள் ஏப்ரல் சம்பளம் ஊதியக் குறைப்பு இல்லாமல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.