ஏடிஎம்மில் ரசீது மட்டும்தான் வந்தது: எஸ்பிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

ஏடிஎம்மில் ரசீது மட்டும்தான் வந்தது: எஸ்பிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: ஏடிஎம்மில் பணம் எடுத்தது போல் ரசீது மட்டும் வந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்பிஐ வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கபலபுராவை சேர்ந்தவர் சந்திரகலா. இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சந்திரகலா கடந்த 2014-ம் ஆண்டு அதேபகுதியில் இருக்கும் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ 25,000 பணம் எடுக்க முயன்றார். அப்போது பணம் எண்ணும் சத்தம் கேட்டது. ஆனால் பணம் வராமல் பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக ரசீது வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரகலா உடனடியாக எஸ்பிஐ வங்கியை தொடர்பு கொண்டார். 

அப்போது வங்கி மேலாளரின் அறிவுரைப்படி எஸ்பிஐ இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதனையடுத்து இன்னும் 45 நாட்களில் உங்களது பணம் வங்கி கணக்கிற்கு வந்து சேரும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பணம் வராததால் மீண்டும் அவர் வங்கியை தொடர்பு கொண்டார். அப்போது உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என வங்கி தரப்பில் இருந்து கூறப்பட்டது. 

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சந்திரகலா இந்த விவகாரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு 4 வருடங்களாக நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்றபோது ஆஜரான வங்கி தரப்பு வழக்கறிஞர், சந்திரகலாவின் பணம் முறையாக எடுக்கப்பட்டுவிட்டது இதற்கு வங்கி பொறுப்பல்ல என வாதிட்டார்.

இதனையடுத்து வங்கி பரிவர்த்தனை ரசீதுகள், ஏடிஎம்மில் பணம் எடுத்த நாளன்று ஏடிஎம் இயந்திரத்தை சரிசெய்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தனது தரப்பு ஆதாரங்களை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில், வழக்கை 4 வருடங்களாக விசாரித்த நீதிமன்றம், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சந்திரகலா பணம் எடுக்க முயன்றும் பணம் வரவில்லை என்பது தெளிவாகிறது. எனவே வங்கி சந்திரகலாவிற்கு ரூ 25,000 வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி வழக்கு தொடர்பான செலவுகளுக்கு ரூ 10,000 வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது.