எழுவர் விடுதலை: அற்புதம்மாளுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆதரவு

 

எழுவர் விடுதலை: அற்புதம்மாளுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆதரவு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவர் விடுதலைக்காக அற்புதம்மாளின் நடைப்பயணத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவர் விடுதலைக்காக அற்புதம்மாளின் நடைப்பயணத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.விபிரகாஷ்குமார் பொதுநல காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது அவரது படவாய்ப்புகளை பாதித்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனாலும் சளைக்காமல் தொடர்ந்து களத்தில் போராடி வருகிறார்.

சமீபத்தில் எழுவர் விடுதலை குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் “இனி உடலில் தெம்பில்லை. கடைசி முயற்சியாக நடைபயணம் போகப்போகிறேன் என்று அறிவித்தவுடன் அவருக்கு ஆதராவாக பலமுனைகளிலிருந்தும் ஆதரவு குரல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், ஜி.வி.பிகாஷ்“அற்புதம்மாளின் எழுவர் விடுதலை குறித்த இந்த நடைபயணத்தில் வழிநெடுக நிற்கும் தமிழ்ச் சொந்தங்களில் நானும் ஒருவனாக துணை நிற்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுநருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அவர்கள் விடுதலையில் இன்றளவும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.