எல்லாம் மோடியும், அமித்ஷாவும்தான் முடிவு செய்வார்கள்: முரளிதர ராவ்

 

எல்லாம் மோடியும், அமித்ஷாவும்தான் முடிவு செய்வார்கள்: முரளிதர ராவ்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மோடியும், அமித்ஷாவும்தான் முடிவு செய்வார்கள் என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.

மதுரை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மோடியும், அமித்ஷாவும்தான் முடிவு செய்வார்கள் என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். மேலும், பாஜகவோடு கூட்டணி அமைக்க அதிமுக தலைமை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. 

அதேசமயம் அதிமுகவோடு கூட்டணி அமைத்தே தீரவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூட்டணி குறித்து நேற்று பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா, பாஜக மாநாடு நடைபெறும் இடங்களை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முரளிதர ராவ்,2014-ம் ஆண்டு இருந்து பாஜக அரசு இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கூடும் முதல் கூட்டம் என்பதால் பெரும் வரவேற்பு உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் 4 வழிச்சாலை, கப்பல் போக்குவரத்து துறை, மருத்துவ காப்பீடு, பாதுகாப்பு துறை தளவாட உற்பத்தி ஆகிய துறைகளில் பெரும் சாதனை புரிந்துள்ளோம்.பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மட்டுமே முடிவு செய்வார்கள். அது பற்றி நாங்கள் கூற முடியாது.

திமுக, அதிமுக-வுடன் பாஜக கூட்டணி என்று பலர் கருத்து கூறுகின்றனர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்தான் கூட்டணி அறிவிப்பு வரும். அதனை பிரதமர் மோடி முறையாக அறிவிப்பார் என்றார்.