எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து இளைஞர் பலி; அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

 

எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து இளைஞர் பலி; அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டெக்சாஸ்: எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகை பிடிக்கும் பழக்கத்துக்கு மாற்றாக, புகை  பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வெளியே வர கண்டுபிடிக்கப்பட்டதுதான் எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்’ என்கிறார்கள். பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும் இதன் உள்ளே நிகோடின் மற்றும் புரோபைலீன் கிளைக்கால் திரவம் நிரப்பப்பட்ட கார்டேஜ், அதைச் சூடுபடுத்தும் சிறிய கருவி மற்றும் பேட்டரி ஆகியவை இருக்கும்.

இ-சிகரெட்டைப் பிடிக்கும்போது அதில் இருந்து நிகோடின் புகை கிளம்பும். புகைப்பவர் அதை உள் இழுப்பார். இதனால், புகை பிடித்தது போன்ற திருப்தி ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பிரவுன் (வயது 24). இவர் எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கி தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியது. அதில் உள்ள உலோகப் பாகங்கள் கழுத்தில் பட்டதில் பிரவுன் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இரு தினங்களுக்கு முன்னர் பக்கவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலன்னின்றி பிரவுன் பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதால்தான் பிரவுன் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இ-சிகரெட் வெடித்து நிகழ்ந்த  இரண்டாவது மரணம் இதுவாகும். கடந்த ஆண்டு மே மாதம் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த 38 வயது ஆண் ஒருவர் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.