எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவை திறக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவை திறக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அரசு சார்பில் ரூ.2.52 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

அவர் தனது மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரீனா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்.ஜி.ஆர் வளைவை திறக்கக்கூடாது என கூறியிருந்தார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் வளைவு அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சேஷசாயி, சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , எம்.ஜி.ஆர் வளைவு கட்டப்படும் இடம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் இதை ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு மக்களின் வரிப்பணம் ஏன் வீணடிக்கப்படுகிறது? 40 ஆண்டுகளாக ஆட்சியமைத்தவர்களால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு செலவிடுவதைவிட, வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தை அரசு செலவிடலாம். எம்.ஜி.ஆர் வளைவு கட்டுமான பணிகளை முடிக்கலாம். ஆனால் வழக்கு விசாரணை முடியும் வரை திறக்கக்கூடாது’ என நீதிபதிகள் கூறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவை திறக்க இடைக்கால தடை விதித்தனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பதாகவும் அவர்கள் கூறினர்.