எம்.ஜி.ஆரையே எதிர்த்த தேவர்…!  | சின்னப்ப தேவரின் 41 வது நினைவு தினம்!

 

எம்.ஜி.ஆரையே எதிர்த்த தேவர்…!  | சின்னப்ப தேவரின் 41 வது நினைவு தினம்!

ஜூபிடர், மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற பெரிய பேனர்களில் நடித்தாலும் வளர்ந்த பிறகு பெரிய தயாரிப்பாளர்களை பெரும்பாலும் தவிர்த்து வந்தார் எம்ஜிஆர். ஆனால் அதே மக்கள் திலகம், சாமான்யனான தனது நண்பரை தூக்கி விட்டு தொடர்ந்து அவருக்கு தனது படங்களை அதிகளவில் தயாரிக்க வாய்ப்பு கொடுத்தார் என்றால் அது சாண்டோ சின்னப்பா தேவருக்கு மட்டும் தான்!
ஏனெனில் சின்னப்பா தேவர் என்கிற மனிதன் எளிமை யானவனாகவும் சமான்யனாகவும் இருக்கலாம் ஆனால் வாக்கு சுத்தமுள்ள, அடுத்துவரைக் கெடுக்க விரும்பாமல் வாழ வைக்கிறதை மட்டுமே செய்யக் கூடிய குழந்தை உள்ளம் கொண்டவர்.

ஜூபிடர், மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற பெரிய பேனர்களில் நடித்தாலும் வளர்ந்த பிறகு பெரிய தயாரிப்பாளர்களை பெரும்பாலும் தவிர்த்து வந்தார் எம்ஜிஆர். ஆனால் அதே மக்கள் திலகம், சாமான்யனான தனது நண்பரை தூக்கி விட்டு தொடர்ந்து அவருக்கு தனது படங்களை அதிகளவில் தயாரிக்க வாய்ப்பு கொடுத்தார் என்றால் அது சாண்டோ சின்னப்பா தேவருக்கு மட்டும் தான்!
ஏனெனில் சின்னப்பா தேவர் என்கிற மனிதன் எளிமை யானவனாகவும் சமான்யனாகவும் இருக்கலாம் ஆனால் வாக்கு சுத்தமுள்ள, அடுத்துவரைக் கெடுக்க விரும்பாமல் வாழ வைக்கிறதை மட்டுமே செய்யக் கூடிய குழந்தை உள்ளம் கொண்டவர்.

mgr and devar

படத்தை முடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்வார், அனைத்திலும் தலையிடுவார் என்று பீதியோட பேசப்பட்ட எம்ஜிஆர், தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் முன் அடியோடி மாறி காட்சியளிப்பார். பூஜைபோட்ட அன்றே ரிலீஸ் தேதியை அறிவிக்கும் தேவரிடம் கட்டுப்பட்டு எம்ஜிஆர் வருடத்திற்கு இரண்டு படங்கள் என தொடர்ந்து நடித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்தார் என்றால் தேவர் எப்பேர் பட்ட கண்டிப்பான பேர்வழியாக இருக்க வேண்டும். நேர்மை இருந்தால் தானே எவரையுமே கண்டிக்க துணிவு வரும்.

சின்னப்பா தேவருடைய பாணியே தனி, தாய்சொல்லை தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்கு பின் பாசம் என தேவரின் ஐந்து எம்ஜிஆர் படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்த சரோஜாதேவி, திடீரென கொஞ்சம் ஹீரோயினுக்கான பந்தாக்களைச் செய்ய ஆரம்பித்தார். தேவர் அலட்டிக் கொள்ளவேயில்லை. சரோஜாதேவிக்கு குட்பை சொல்லி விட்டு, சாவித்திரியை வேட்டைக்காரன் படத்தில் எம்ஜிஆருக்கு நாயகியாக்கி வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டே போனார். 
கே-ஆர், விஜயா, ஜெயலலிதா என அடுத்த கட்ட வரவுகளை நோக்கி போய்க் கொண்டே இருந்தார் தேவர். எந்த நேரத்திலும் கலங்காத துணிச்சலான மனதை கொண்டவர் தேவர். முதன் முதலில் தயாரித்த தாய்க்கு பின் தாரம் படம் மெகா வெற்றி படமாக இருந்தாலும், படத்தின்  தெலுங்கு உரிமை விஷயத்தில் எம்ஜிஆருடன் தேவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இத்தனைக்கு தேவரும் எம்ஜிஆரும் நீண்டகால நண்பர்கள்.

mgr and devar

துணை நடிகராக 45 ரூபாய் சம்பளத்திற்கு ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆருடன் சண்டை போட்டது முதல் அவ்வளவு நெருக்கமாகிப் போனார்கள், இருவருமே வாழ்க்கையில் மிகவும் அடிபட்டி நொந்து நூலாகி உயர்வை சந்தித்தவர்கள். அதிலும் பாடிபில்டரான தேவர் ஆரம்பத்தில் பால், சோடா, அரிசி வியாபாரம் உள்பட செய்து பார்க்காத தொழில்களே கிடையாது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட உழைப்பாளியான தேவர், எம்ஜிஅர் இல்லை என்றானவுடன் கலங்கி நிற்காமல் ரஞ்சன், ஜெமினிகணேசன் போன்றவர்களை வைத்து என் வழி தனி வழி என்று போக ஆரம்பித்தவர்.
தீவிர முருக பக்தரான சின்னப்பா தேவர் எப்போது எந்த கல்லை பிள்ளையாராக்கி பணம் கொட்ட வைப்பார் என சொல்லவே முடியாது. அதேபோல அந்த மனுஷனால எப்படி இப்படி தைரியமாக இறங்க முடிந்தது என்றும் எல்லோரையும் வியக்க வைப்பார். தமிழை மட்டுமே தெரிந்த கோவைவாசி சின்னப்பா தேவர். ஜெமினி, ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே எட்டிப் பார்த்து வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த இந்தித் திரையுலகில் அவர் நுழைவார் என யாருமே நினைக்கவில்லை.
இந்தியே தெரியாமல் 1970ல் ராஜேஷ் கன்னாவை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் தேவர். ஆராதனா படத்தின் மூலம் ஒவர் நைட்டில் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த ராஜேஷ்கன்னாவே, ஹாத்தி மேரா சாத்தி என்ற அந்த படத்தின் வசூல் வேகத்தை பார்த்து தான், முதன் முறையாக இந்தி திரையுலக ஜாம்பவான் சக்தி சமந்தாவுடன் சேர்ந்து சக்திராஜ் என்ற சொந்த கம்பெனியை ஆரம்பித்து விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றும் வியாபார யுக்தியை ஆரம்பித்து வைத்தார் தேவர்.
இந்த படத்திற்கு லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். ஆனால் பயங்கர பிசியால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மும்பையில் பேச்சுவார்த்தை நடந்த இடத்தில் லக்ஷ்மி காந்தின் குழந்தைக்கு அன்று இரவு பிறந்த நாள் பார்ட்டி நடக்கப்போகிறது என்பதை தேவர் தெரிந்துக் கொண்டார்.
உடனே ஒரு நகைக்கடைக்கு ஓடிப்போய் தங்க காசுகளை கை நிறைய வாங்கிக்கொண்டு பார்ட்டி நடந்த இடத்திற்கு அழையா விருந்தாளியாக சென்றார் தேவர். 
எல்லாரும் அதிர்ச்சியடையும் வகையில் தங்ககாசுகளை குழந்தையின் தலையில் கொட்டி வாழ்த்தினார்.

devar

லஷ்மிகாந்தின் மனைவியிடம் தன் படத்திற்கு இசையமைக்க கணவரை வற்புறுத்துங்கள் என்றார். அவ்வளவு தான், `இதோ பாருங்கள் இங்கே வந்திருப்பவர்களில் பலரும் பார்ட்டியில் குடிக்க வந்தவர்கள். ஆனால் இவரோ நம் செல்வத்தை தங்கத்தால் அபிஷேகம் செய்து வாழ்த்தியுள்ளார். இவர் படத்திற்கு இசையமைக்காவிட்டால் நடப்பது வேறு என்று கணவரிடம் பொங்கினார் திருமதி.
அப்புறமென்ன.. தேவர் படத்திற்கு பொங்கிய லக்ஷ்மிகாந்த், பியாரிலால் ஜோடி இசை, இந்தியாவையே சல்..சல்…மேரே ஹாத்தி என தாளம் போடவைத்தது.
இந்த இசை ஜோடியை புக் செய்யச் சொல்லி முதன் முதலில் ஐடியா தந்த இயக்குநர் ஸ்ரீதரே, தேவரின் இந்த தடாலடியை பார்த்து மிரண்டு போய் விட்டார். இந்த ஹாத்தி மேரே சாத்தி தான் தமிழில் எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம் படமாக ரீமேக்கானது.
ராஜேஷ்கன்னாவை வைத்து மெகா ஹிட் கொடுத்த, தேவருக்கு புகழ்பெற்ற தர்மேந்திரா ஹேமாமாலினி ஜோடி உறுத்தவே அவர்களுக்கு ஒரு கதை தயார் செய்தார்.
ராஜேஷ்கன்னா, ஹாத்தி மேரோ சாத்தி படத்தில் தன்னை குழந்தை பருவத்தில் சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றிய யானையையும் அதன் கூட்டத்தை வளர்த்தெடுத்து நன்றி காட்டினார் என்றால், தர்மேந்திராவுக்கும் அதே யானை கதையைத்தான் கொடுத்தார் தேவர், ஆனால் இம்முறை தாயிடமிருந்த குட்டியானையை பிரிக்கும் ஒருவனே, கடைசியில் இருவரையும் சேர்ந்து வைக்க கடும்பாடு படவேண்டியிருந்தது. மா என்ற பெயரில் வெளியான படம் அந்த இந்தியா முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்து வெற்றிபெற்றது. இதே மா படம் தான் தமிழில் ரஜினியை வைத்து தேவர் குடும்பம் பின்னாளில் அன்னை ஓர் ஆலயம் என எடுத்தது. 
பாஷை தெரியாத இந்தியிலே தேவர் இப்படியெல்லாம் சாகசம் செய்தார் என்றால் தமிழில் சும்மா இருப்பாரா?

devar

1974ல் ஒருயொரு பாம்பை வைத்து சிவகுமார்- ஜெயசித்ரா காம்பினேஷனில் வெள்ளிக்கிழமை விரதம் என்ற படமெடுத்து விட்டார். ஒட்டு மொத்த தாய்க்குலமும் பாம்பு செண்டிமென்ட்டுக்கு கட்டுப்பட்டு தியேட்டர் பக்கம் திரும்ப திரும்ப வந்து பணத்தை கொட்டிவிட்டுபோனது.
ஒரு ஆட்டை வைத்து ஆட்டுக்கார அலுமேலு என்று படம் கொடுத்து பணத்தை மூட்டை மூட்டையாக கட்டும் வித்தை தேவருக்கு மட்டும் வசப்பட்ட கலை. அந்த ஆட்டை ஊர் ஊராய் கொண்டுபோய் பார்வையாளர்களிடம் காட்டி இன்னும் வசூலை வாரிக்குவிக்கும் பிரமோட் கலையிலும் அவர் கில்லாடி!
எம்ஜிஆர், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, ரஜினி கமல் உள்பட பல டாப் ஸ்டார்கள் யானை, புலி, சிங்கம் பாம்பு, மயில் போன்றவற்றுடன் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியவர் தேவர் மட்டுமே. இன்று உலகநாயகனாக போற்றப்படும் கமல் இளைஞனாக வளர்ந்து முதன் முதலில் பாடல் காட்சியில் குட்டி பத்மினியுடன் கலாட்டா கம் டூயட் என ஆடிப்பாட வாய்ப்பு பெற்றார் என்றால் அது 1970ல் வெளியான தேவரின் மாணவன் படத்தில் தான்!
1967ல் எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அங்கே சென்றவர்களெல் லாம் பீதியோடு இருக்க,, டிபன்பாக்ஸ் நிறைய பணத்தை எடுத்துபோய் அவரிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் எழுந்து வந்து என் படத்தில் நடி தெய்வமே என்று சொன்ன வியப்பின் அடையாளம் சின்னப்பா தேவர்.
ஐந்தாவது வகுப்புவரை மட்டுமே படித்த சின்னப்பா தேவர், நேர்மையான மனதோடு துணிச்சலாய் சாதித்த சாதனைகளை அவ்வளவு சுலபத்தில் சொல்லிமுடித்து விட முடியாது. இன்று சின்னப்ப தேவரின் 41 வது நினைவு தினம். அவரது நினைவுகளைப் போற்றுவோம்!

-ஏழுமலை வெங்கடேசன்