எம்.எல்.சி. நியமனம் விவகாரம்….மவுனம் சாதிக்கும் மகாராஷ்டிரா கவர்னர்…. மோடிக்கு போன் போட்ட உத்தவ் தாக்கரே

 

எம்.எல்.சி. நியமனம் விவகாரம்….மவுனம் சாதிக்கும் மகாராஷ்டிரா கவர்னர்…. மோடிக்கு போன் போட்ட உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை போனில் தொடர்பு கொண்டு, தன்னை மேலவை உறுப்பினராக நியமனம் செய்வதில் கவர்னர் தாமதம் செய்யும் விவகாரத்தில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அப்போது அவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லை. அரசியல் சட்டத்தின்படி 6 மாதத்துக்குள் (மே 28) அவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாகவோ பதவியேற்றால் மட்டுமே தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க முடியும். 

துணை முதல்வர் அஜித் பவார்

மாநிலத்தில் காலியாக உள்ள எம்.எல்.சி. இடங்களில் ஒன்றில் நின்று எம்.எல்.சி.யாகி விடலாம் என உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக எம்.எல்.சி. தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதியன்று துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில், எம்.எல்.சி. உறுப்பினர்கள் நியமனத்தில் கவர்னருக்கான 2 ஒதுக்கீட்டில் ஒன்றை உத்தவ் தாக்கரேவை நியமிக்க கவர்னருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்தது. இதனை கவர்னரிடம் அமைச்சரவை தகவல் தெரிவித்தது. ஆனால் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி இந்த விவகாரத்தில் மவுனமாக இருந்தார்.

மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி

இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்கள் கவர்னரை சந்தித்து, கவர்னருக்கான ஒதுக்கீட்டில் உத்தவ் தாக்கரேவை எம்.எல்.சி.யாக நியமிக்கக்கோரி புதிதாக மாநில அமைச்சரவையின் பரிந்துரையை அளித்தனர். மேலும் விரைவாக முடிவு எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கவர்னர் கோஷ்யாரி ஒரு வாரத்துக்குள் தனது முடிவை தெரியபடுத்துவதாக கூறினார். உத்தவ் தாக்கரேவை மேலவை உறுப்பினராக நியமனம் செய்வது தொடர்பாக அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் கவர்னர் கோஷ்யாரி கருத்து கேட்பார் என தகவல். 

பிரதமர் மோடி

இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியை முதல்வர் உத்தவ் தாக்கரே போனில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், கொரோனா வைரஸ் நெருக்கடியை சந்திக்கும் போது, மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலத்தில் அரசியல் ஸ்திரமின்மை உருவாக்குவது சரியில்லை. கவர்னர் தன்னை மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய தாமதம் செய்யும் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டார் என தெரிவித்தார்.