‘எம்.எல்.ஏ. சீட்டும் கேட்கவில்லை; கட்சி பதவியும் தேவையில்லை’ – கெத்து காட்டும் உதயநிதி

 

‘எம்.எல்.ஏ. சீட்டும் கேட்கவில்லை; கட்சி பதவியும் தேவையில்லை’ – கெத்து காட்டும் உதயநிதி

திமுகவில் பதவியும் கேட்கவில்லை, எம்.எல்.ஏ. சீட்டையும் எதிர்பார்க்கவில்லை என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுகவில் பதவியும் கேட்கவில்லை, எம்.எல்.ஏ. சீட்டையும் எதிர்பார்க்கவில்லை என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் அடுத்த ஆஸ்தான வாரிசாகப் பார்க்கப்படும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினி மகன் உதயநிதி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து வாய் திறந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர், உதயநிதியை வாழ்த்தி அடித்திருந்த போஸ்டரில், உதயநிதியை மூன்றாம் கலைஞர் என்றும், வருங்கால தமிழகம் என்றும் ஆகா, ஓகோ என வாழ்த்தி அடித்த போஸ்டர், நெட்டிசன்களிடையே சிக்கி சின்னாபின்னமானது.

udhay 

ஒரு கட்டத்தில், தன் ட்விட்டர் மூலம் அந்த போஸ்டருக்கு விளக்கம் அளித்த உதயநிதி, தன் கவனம் இல்லாமல் இது நடந்துவிட்டதாகவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் கூறியிருந்தார்.

இப்படி, திமுக உடன்பிறப்புகள் போஸ்டர் அடிப்பதும், அதற்கு உதயநிதி விளக்கம் கொடுப்பதும் என மெல்ல மெல்லத் தீவிர அரசியல் நோக்கி அவர் நகர்ந்து வருவதாகவே பத்திரிகைகள் எழுதத் தொடங்கின.

இந்நிலையில், தற்போது தனியார் ஊடகம் ஒன்றுக்கு உதயநிதி அளித்துள்ள பேட்டியில், “கடந்த தேர்தலில் எனது அப்பா (மு.க.ஸ்டாலின்) கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். நான் அவரது தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அது வதந்தி என்று உறுதியானது. இப்போது மீண்டும் அதுபோன்ற வதந்திகள் கிளம்பியுள்ளது. ஆனால், எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. நான் தேர்தலில் நிற்பதைப் பற்றி யோசிப்பதற்கான நேரம் இது இல்லை. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதற்கு காரணம் கட்சியின் செய்தித்தாளுக்கு மேலாளராக இருப்பதும், நடிகராக இருப்பதும் தான். 

udhay

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் மட்டும்தான் போராட்டங்களில் கலந்து கொள்கிறேன். கட்சியில் எம்.எல்.ஏ. சீட்டோ , பதவியோ நான் கேட்கவில்லை. ஒரு சாதாரண அடிமட்ட உறுப்பினராக இருப்பதைத் தவிர நான் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. என்மீது இருக்கும் அன்பால் கட்சித் தொண்டர்கள் போஸ்டர் அடிக்கிறார்கள். வேண்டாம் என்று பலமுறை சொல்லிவிட்டேன். போஸ்டர் அடிப்பதற்கு எல்லாம் ஒன்றும் செய்யமுடியாது. எல்லா போஸ்டர்களை கிழித்துக் கொண்டிருக்க முடியுமா?” என விளக்கமாக பேசியுள்ளார்.